

திருத்தணி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணை நிரம்பியதால் விநாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றுக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கனமழை பெய்துள்ளதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள 200 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணாபுரம் அணை நிரம்பியுள்ளது. இதனால், அந்த அணையிலிருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் விநாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அந்த நீர், ஆந்திர, தமிழகப் பகுதிகளில் உள்ள குசா மற்றும் லவ ஆறுகள் வழியாக பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜூபேட்டையில் கொசஸ்தலை ஆறுக்கு இன்று காலை வந்தடைந்தது.
ஆகவே, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள பெருமாநல்லூர், புண்ணியம், குமாரமங்கலம், நல்லாட்டூர், லட்சுமாபுரம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகராஜன்