Published : 20 Sep 2019 05:08 PM
Last Updated : 20 Sep 2019 05:08 PM

அண்ணா பல்கலை. புதிய தேர்வு முறையை எதிர்த்து வழக்கு: 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாணவர் ஒருவர் ஒரு செமஸ்டரில் தோல்வியடைந்தால் மறு தேர்வு எழுத அவருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் தேர்ச்சியடையாவிட்டால், மேற்கொண்டு தேர்ச்சியடையும் வரை அடுத்த செமஸ்டருக்குச் செல்ல முடியாது என விதிமுறை கொண்டு வரப்பட்டது.

இந்தப் புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜே.கே.கே.நடராஜ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மெளலி மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்ட 10 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அதில், இந்தப் புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரிப் படிப்பை முடித்து உடனடியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் இந்தப் புதிய நடைமுறையை 2 மற்றும் 3 ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (செப்.20) நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் கந்தவடிவேல் ஆஜராகி, இந்தப் புதிய தேர்வு நடைமுறையால் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்குப் பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக உயர்கல்வித் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x