Published : 20 Sep 2019 05:03 PM
Last Updated : 20 Sep 2019 05:03 PM

சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள்; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க முடியாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களைத் தடுக்க சமூக வலைதளக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளைமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று (செப்.20) இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர ஒரு தளம் அமைத்துக் கொடுத்துவிட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்குப் பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் அப் நிறுவனம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உலக அளவில் ஒரு சட்டம் இருத்தாலும், இங்கு இந்தியாவின் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.

காட்சி ஊடகங்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அமைப்பு இருப்பதைப் போல, சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர், சமூக வலைதளங்களைக் கண்காணிக்கவும், தவறான தகவல்களைக் கண்டறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும், தற்போது அது அரசின் இறுதி முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, ட்விட்டர் மற்றும் முகநூல் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதைப் போல வாட்ஸ் அப் நிறுவனம் வழங்குவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x