Last Updated : 20 Sep, 2019 04:41 PM

 

Published : 20 Sep 2019 04:41 PM
Last Updated : 20 Sep 2019 04:41 PM

கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் அரசுக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

கல்லூரி மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை-சென்னை புறவழி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இளங்கலை பட்டப்படிப்புக்கான ஒரு பாடத்திற்கு ரூ.68-ல் இருந்து ரூ.100 ஆகவும், முதுகலை பட்டப்படிப்பில் ஒரு பாடத்திற்கு ரூ.113-ல் இருந்து, ரூ.160 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் கிராமப்புற ஏழை, மாணவ, மாணவிகளே படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த இருநாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இந்நிலையில் தொடர் போராட்டத்தால் நேற்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இன்று (செப்.20) வழக்கம்போல் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாகவும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன்பு திரண்ட அவர்கள் தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4-வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பும் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்விக் கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழத்தினைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து காலை வகுப்புகள், மதிய வகுப்புக்கள் மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை-சென்னை புறவழிச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ , மாணவிகளிடம் கலைந்து செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். தொடர்ந்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் இன்று பிற்பகல் 12.10 முதல் 12.50 வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x