Published : 20 Sep 2019 03:37 PM
Last Updated : 20 Sep 2019 03:37 PM

தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல்: எச்.ராஜா கண்டனம்

சென்னை

தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருவதாக, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்தார்.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் பலரும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தித் திணிப்புக்கு எதிராக வரும் 20-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ராஞ்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, "இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்றால் இந்தி கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் நான் கூறினேன். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்தே வந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே அமித் ஷாவின் விளக்கத்தையும் ஆளுநரின் பேச்சையும் ஏற்ற திமுக தனது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

அதேபோல, ''இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் எந்த எல்லைக்கும் திமுக செல்லும். எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்'' என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''திராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க, மறைக்க, அழிக்க உபயோகப்படுத்தும் சொல் என்பதை உணர்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.

எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு, இரு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x