

சென்னை
மேடை அமைத்து கட்சியினருடன் போராடுவதுதான் களமா என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் இன்று (செப்.20) செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இனி தமிழகத்தில் அலட்சியக் கொலைகள் நடக்கக் கூடாது. எல்லோருக்கும் மரணம் உண்டு. அதனை மற்றவர்களின் அலட்சியத்தால் அவசரப்படுத்தக் கூடாது. அலட்சியத்தின் அளவு அதிகமாக அதிகமாக இவற்றைக் கொலை குற்றமாகவே பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அப்போதுதான் இம்மாதிரியான அலட்சியக் கொலைகள் நடக்காது. அரசே இம்மாதிரியான கொலைகளைச் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார்.
சுபஸ்ரீ மரணத்துக்குக் காரணமான பேனர் வைத்தவரைக் கைது செய்யாதது ஏன்?
சட்டத்தை முறைப்படியாக செயல்படுத்தவில்லை என்பதுதான் அதன் அர்த்தம். சம்பந்தப்பட்டவரை போலீஸார் பிடிக்க வேண்டும் என்பதுதான் சட்டம், பிடித்தாக வேண்டும் என்பதுதான் திட்டம். சட்டமோ திட்டமோ இது நிறைவேற்றப்படாமல், கயவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான எல்லா வழிகளையும் அரசு, இங்குள்ள கட்சிகளும் செய்துகொண்டிருக்கின்றன.
'நடிகர்களும் பேனர் வைக்கின்றனர்' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?
சினிமாவுக்கு வைப்பதை விட அதிகமாக என்னுடைய 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பேனர் வைத்துள்ளனர். ஆனால், சட்டப்படி எங்கே அனுமதி இருக்கிறதோ அங்கேதான் பேனர் வைக்கின்றனர். கட்சி ஆரம்பித்ததிலிருந்து இதனை வலியுறுத்தி வருகிறது மக்கள் நீதி மய்யம். சில மூக்குகள் நீளமாக இருக்கும், அவை அறுபடும்.
களத்திற்கு வந்து போராடாதது ஏன்?
களத்திற்கு வந்து யார் போராடிக் கொண்டிருக்கின்றனர்? பேனர் வைக்கப்பட்ட இடத்திற்கு யாராவது வந்தார்களா? சுபஸ்ரீயின் வீட்டுக்கு எத்தனை பேர் சென்றனர்? மேடை அமைத்து கட்சியினருடன் போராடுவதுதான் களமா? அப்படியென்றால், அந்தக் களம் எங்களுக்குத் தேவையில்லை. மக்களுடன் இருக்கும் களம் தான் எங்களுக்குக் களம்," என கமல்ஹாசன் தெரிவித்தார்.