Published : 20 Sep 2019 02:58 PM
Last Updated : 20 Sep 2019 02:58 PM

பேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத் துறையினருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை

விஜய் கூறிய கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (செப்.19) நடைபெற்ற 'பிகில்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், "பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். இது போன்ற சமூகப் பிரச்சினைக்கு ஹேஷ்டேக் போடுங்கள். சமூகப் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். இங்கு யாரைக் கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விடுகிறார்கள். போஸ்டர் பிரிண்ட் செய்த கடைக்காரரைக் கைது செய்கிறார்கள்," என்று பேசினார்.

விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தி எதிர்ப்பு என்றுகூறி சிலர் மக்களைத் திசை திருப்புகின்றனர். நாடு முழுவதும் தமிழ் மொழி பரவ, சீரிய மொழியில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

அரசியல் கட்சியினரே புரிதல் இல்லாமல் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். பிறகு திருத்திக் கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது ஒரு நடிகர் சில விஷயங்களைச் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களும் நாட்டின் குடிமக்கள்தான்.

திரைப்படத் துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன? அவையனைத்தும் அனுமதி வாங்கிய பிறகுதான் வைக்கப்பட்டதா? தயவுசெய்து இத்தகைய விவகாரங்களில் நுழைந்து மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்.

கோயில்களில் பேனர்களை வைக்கக்கூடாது. எவ்வித மத நிகழ்ச்சிகளிலும் பேனர் வைக்கப்படுவது தேவையில்லாதது'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x