ஈரோடு அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஒன்றரை வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஒன்றரை வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஈரோடு அருகே கொங்கம்பாளையம் ஆவுடையான்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கல்பனா (26). இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ரித்திகா என்று பெயர் சூட்டினர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை ரித்திகாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. மேலும், சளி தொந்தரவும் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமாரும், கல்பனாவும் குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, ரித்திகாவின் வயிற்றில் உள்ள குடல், இதயத்துக்கு அருகில் வரை சென்று சுற்றி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க வைத்தனர். மறுநாள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரகுராஜா, தங்கதுரை, பிரேம்நவாஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர்களை ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கோமதி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாவதி தேவி ஆகியோர் பாராட்டினர்.

இதுகுறித்து இணை இயக்குநர் கோமதி கூறியதாவது:

"ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் குழந்தைகளுக்கு இதுவரை இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில்லை. முதல் முறையாக குழந்தை ரித்திகாவுக்கு குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ரித்திகாவுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட துளை காரணமாக குடல், மார்பு பகுதியில் சென்றது. அங்கு இதயத்துக்கு அருகில் குடல் சுற்றி இருந்ததை கண்டுபிடித்தோம். உடனடியாக அந்த அறுவை சிகிச்சை செய்து குடல், வயிற்றுப் பகுதிக்கு இறக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு குடல் மார்பு பகுதிக்கு சென்ற நோய்க்கு டையபிரமட்டிக் ஹெர்னியா என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. தற்போது குழந்தை மிகவும் நலமுடன் உள்ளார்,"

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிந்தராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in