Published : 20 Sep 2019 12:43 PM
Last Updated : 20 Sep 2019 12:43 PM

மீண்டும் ஒரு மொழிப் போர்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

சென்னை

மீண்டும் ஒரு மொழிப் போர் நடக்க உள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ் இணையக் கழகத்தின் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கெத்து, வச்சு செய்வேன் என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தவை. அவற்றை இளைஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்துகிறார்கள்.

உலகத்தில் 7,500 மொழிகள் உள்ளன. அவற்றில் 101 மொழிகள் மட்டுமெ இணைய யுகத்தில் உள்ளன. ஒரு மனிதனின் தகவல் தொடர்பு, நூற்றுக்கு 80 சதவீதம் ஸ்மார்ட் போன் மூலமாகவே நடைபெறுகிறது. அல்லது இணைய வழியாக நிகழ்கிறது. இந்த 80 சதவீதத்தில், 101 மொழிகள் மட்டுமே வருகின்றன. இதில் ஆங்கிலம் மட்டுமே 54 சதவீதத்தை எடுத்துக்கொண்டு விட்டது.

தொலைத்தொடர்பில் ஆங்கிலம் இன்று மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஆங்கிலம், மற்ற மொழிகளைக் கபளீகரம் செய்துவிடுவோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இணையத் தகவல் பரிமாற்றத்தில் இந்திய மொழிகளின் பங்கு, மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் 45% பேசப்படும் இந்தி மொழி கூட, இணையத்தில் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. 0.1 சதவீதம் என்ற அளவில்தான் இணைய இந்திப் பயன்பாடு உள்ளது. இது ஒரு வித்தியாசமான நிலை.

இதனால் தமிழ் மொழியை இணையத்துக்குள் எடுத்துச் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ் இணையக் கழகத்தைத் தொடங்கினார். உயர் கல்வித் துறையின் உதவியுடன் இதில் மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீண்டும் ஒரு மொழிப் போர் நடக்க உள்ளது. ஆனால் இந்தப் போர் எந்த மொழியையும் எதிர்த்து நடைபெறாது'' என்றார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x