Published : 20 Sep 2019 11:23 AM
Last Updated : 20 Sep 2019 11:23 AM

திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைகள், போக்குவரத்து நெரிசல்கள், சேதமடைந்த சாலைகள்..!- மதுரை மாநகர் மீது உள்ளூர் அமைச்சர்கள் பார்வை படுமா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

பாரம்பரியத்துக்கும் பழமைக்கும் புகழ்பெற்ற மதுரை மாநகர் நாட்டின் முக்கிய ஆன்மிக, சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. சமீபத்தில், நாட்டிலேயே இரண்டாவது சுகாதாரமான புண்ணிய தலமாக மீனாட்சியம்மன் கோயில் தேர்வு பெற்றது. விரைவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, பஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் வரவுள்ளன.

மதுரை விமான நிலையமும் சர்வதேச தகுதியைப் பெற உள்ளது. ஆனால், மக்கள்தொகை, வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. தொலை நோக்குப் பார்வையில் காளவாசல் மேம்பாலமும், மதுரை நத்தம் சாலையில் பறக்கும் பாலம் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த இரண்டு திட்டங்களைத் தவிர சாலை மேம்பாட்டுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் உருப்படியான எந்தத் திட்டமும் மதுரையில் நிறைவேற்றப்படவில்லை.

பஸ்போர்ட் பறிபோகும் அபாயம்

மதுரை கோரிப்பாளையம் சிக்கனல் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் திட்டம், பெரியார் பஸ்நிலையம் முதல் சிம்மக்கல் வழியாக கோரிப்பாளையம் வரை பறக்கும் பாலம் அமைக்கும் திட்டம் ஆகியன அறிவித்து 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பஸ்போர்ட் திட்டம் அறிவித்த வேகத்தில் கோவை, சேலத்தில் பணிகள் துரிதமாக நடக்கின்றன. ஆனால், மதுரையில் இன்னும் பஸ்போர்ட் எந்த இடத்தில் அமையும், வருமா? வராதா? என்ற குழப்பமே நீடிக்கிறது. இதற்கிடையில் பஸ்போர்ட் திட்டத்தை திருச்சிக்குக் கொண்டு செல்ல தஞ்சாவூர், திருச்சிப் பகுதி ஆளும்கட்சி அமைச்சர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச விமான நிலையம்

அதேபோல், மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. திருச்சி விமான நிலையம் பாதிக்கப்படும் எனக்கூறி சர்வதேச இரு வழிப் போக்குவரத்து வழித் தடத்தில் மதுரை விமானநிலையம் சேர்க்கப்படாமல் உள்ளது.

அதனால், மதுரையில் உற்பத்தி யாகும் மலர்கள், பழங்கள், காய்கறி களை திருச்சி கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அவலமும், பயணிகள் சென்னை, திருச்சிக்குச் சென்று வெளிநாடு பயணம் செல்வதும் தொடர்கிறது.

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம் மட்டும் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்பட் டுள்ளது. ஆனால்,இன்னும் அதற்கான மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பெயரளவுக்கு மட்டுமே மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்படுகிறது.

சிட்டம்பட்டி-சமயநல்லூர் வரையிலான மதுரை உள்வட்டச் சாலை திட்டமும் (Inner Ring Road) அறிவிப்போடு சரி, இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை. அதனால், ஏழை, நடுத்தர மக்கள் கார்ப்பரேட் மருத்துவமனை களுக்குச் சென்று பெரும் பொரு ளாதார இழப்புகளைச் சந்தித்து கடனாளியாகின்றனர். பெரியார் பஸ்நிலைய கட்டுமானமும், நத்தம் பறக்கும் சாலை அமைக்கும் பணியும் மந்தகதியில் நடப்பதால் இப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. லேசான மழை பெய்தாலே நத்தம் சாலை சேறும் சகதியுமாகி இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மழையில்லாவிட்டால் புழுதிமய மாகிவிடுகிறது.

சேதமடைந்த சாலைகள்

பெரியார் பஸ்நிலையப் பணி நிறையவடைய இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரை பெரியார் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் மக்கள் மழையிலும், வெயிலிலும் நிற்க இடமில்லாமல் சிரமப்படும் பரிதாபம் தொடர்கிறது.

மதுரை நகரில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கே லாயக்கற்றதாகி சிதைந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. சாரல் மழைக்கே நகரின் எந்தச் சாலைகளிலும் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தெப்பம் போல் தேங்கி நிற்கிறது.

திருச்சி, கோவை, சேலத்தை ஒப்பிடும்போது மதுரை வழியாக பயணிகள் ரயில்கள் மிகக் குறை வாக இயக்கப்படுகின்றன. மதுரை வழியாக புதிய வழித் தடங்கள் உருவாக்கப்படவே இல்லை.

மதுரை-காரைக்குடிபுதிய ரயில்வே பாதைத் திட்டம் கைவிடப் பட்டதாகவே கூறப்படுகிறது. மதுரை ரிங் ரோடு மற்றும் வடபழஞ்சியில் தொடங்கப்பட்ட இரண்டு தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் இன்னும் முழுமையாகச் செயல்படவில்லை.

பெரியார் குடிநீர் திட்டம் அறிவித்து 2 ஆண்டுகளை நெருங் கப்போகிறது. இன்னும் ஒரு திட்டப்பணிக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

இத்தனை பிரச்சினைகளும், திட்டங்களும் தீர்வு காணப்படாமல் உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உள்ளூர் பிரச்சினைகளைப் பேசி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் சர்வதேச பிரச்சினைகளைப் பற்றி பேசி வருகின்றனர்.

அமைச்சர்கள் அலட்சியம்

மதுரைக்கு என்ன தேவை, எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றி அமைச்சர்கள் சிந்திக் காமல் அரசியலை மட்டுமே பேசி திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். குறிப்பாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகரின் பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்களில் போதிய கவனம் செலுத்துவதாகவே தெரிய வில்லை. அவர் எதிர்க் கட்சியினரை விமர்சிப்பதிலும், வெளிநாடு களைப் பற்றியுமே பேசி வருகிறார்.

மக்களின் அடிப்படைத் தேவைகள், அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் கட்சிக்காரர்களையும், முதல்வரையும் திருப்திப்படுத்த மதுரை கே.கே.நகர் நுழைவாயில் வளைவு அருகே ரவுண்டானா நடுவே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார். இதற்காக அமைச்சரே அங்கு 22 அடி உயரத்தில் இரும்பு ஷீட்களை அமைத்துள்ளார். அதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரி யாமல் விபத்து அபாயம் நிலவு கிறது. அமைச்சர் என்பதால் போக்கு வரத்து போலீஸாரும், அதை ‘கை’ கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

அமைச்சர் ஆர்.பி. உதய குமாரும் திருமங்கலம் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். அதேநேரத்தில் மதுரை நகரிலும், புறநகர் பகுதியிலும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் மீது அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மதுரை மாநகரில் 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்லக்கூடிய ஒருங்கிணைந்த பேருந்துநிலையத்துக்கு செல்லும் பிரதானச் சாலையில் அதுவும் முக்கிய திருப்பத்தில் எம்ஜிஆர் சிலையைச் சுற்றிலும் தடுப்புகளை வைத்து மறைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எதிரே வரும் வாகனம் எதுவும் தெரியவில்லை. சிலையை சீரமைப்பதற்கோ அல்லது வேறு எந்தப் பணிக்கோ என்றாலும், மாநகராட்சி, காவல்துறை நிர்வாகங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய விதிமீறலை ஆளுங்கட்சி என்பதால் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x