Published : 20 Sep 2019 11:07 AM
Last Updated : 20 Sep 2019 11:07 AM

ஈரோட்டில் தொடர் மழையால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: தடுப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

ஈரோடு 

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழைப்பொழிவு காரணமாக, ஏராளமானவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பருவமழை மாற்றத்தால், பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் செயல்படும் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும், மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட கோபால் மண்டல் (38) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த மேலும் மூன்று நோயாளிகளுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில், தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில், ஆட்சியர் சி.கதிரவன் மற்றும் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக கூறப்படும் நன்னீர் தேங்கும் பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் துறையினரிடம் இணைந்து சுகாதாரத் துறையினர் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

டெங்கு பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது:

செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த காலங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருக்கும். தற்போது மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு இருப்பதால், பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ சென்று முறையாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

தன்னிச்சையாக அருகிலுள்ள மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. ஈரோடு மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x