

சென்னை
சென்னையில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 68 தொழிலாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் நிவாரணத்தை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வழங்கியுள்ளது.
சென்னை வால்டாக்ஸ் சாலை, கொண்டித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தங்க நகை மற்றும் பானி பூரி தயாரிக்கும் தொழில்களில் கொத்தடிமை தொழிலாளர்களாக குழந்தைகள் ஈடுபடுத்தப் படுவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் துறை, வருவாய்துறை, மாவட்ட சட்டப் பணிகள்ஆணையம் ஆகியவை இணைந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 68 பேர் மீட்கப்பட்டு, காசிமேடு, மாதவரம் பகுதிகளில் உள்ள அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது பெற்றோர் குறித்த தகவல்களை வருவாய் மற்றும் தொழிலாளர் துறையினர் பெற்று, அவர்களை தொடர்பு கொண்டனர். பெற்றோரிடம் குழந்தைகளை அனுப்பி வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட அனைவரும் ஹவுரா ரயில் மூலம் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், தொழிலாளர் ஆணையர் ஆகியோரது அறிவுறுத்தல்படி, தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீட்கப்பட்ட 68 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.