Published : 20 Sep 2019 08:51 AM
Last Updated : 20 Sep 2019 08:51 AM

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுங்கச்சாவடிகளில் டிச.1 முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறையை கட்டாயமாக்க தீவிரம்: தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாவடி களிலும் வரும் டிசம்பர் 1 முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட் டாயமாக்கப்படுகிறது. இதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 4,974 கி.மீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலை கள் உள்ளன. இதில், 2,724 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மொத்தமுள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச் சாவடிகள் தனியார் நிறுவனங் களாலும், 22 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமும் பராமரிக்கப்பட்டு வரு கின்றன.

நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சுங்கச்சாவடி நிறுவனங்கள் போதிய அளவில் சாலைப் பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை செய்து தருவதில்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இத னால், ஒவ்வொரு சுங்கச்சாவடிக ளிலும் சுமார் 15 முதல் 20 நிமிடங் கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, பரனூர், பெரும் புதூர், வாலாஜா, செங்குன்றம் போன்ற சுங்கச்சாவடிகளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத் திருக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துவதால் சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்துக்கு கூடுதல் நேரமாகிறது. இதைத் தவிர்ப்ப தற்காக ‘பாஸ்டேக்' (FASTag) (மின்னணு கட்டணம்) முறைப்படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த ‘பாஸ்டேக்' கார்டு வாகனத்தின் விண்ட் ஷீல்டில் ஒட்டப்படும். வாக னம் சுங்கச்சாவடியைக் கடக்கும் போது அதற்குரிய கட்டணத்தை கழித்துக் கொள்ளும் வகையில் ‘பாஸ்டேக்’ மின்னணு கார்டு வடி வமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் 10 விநாடிகளில் சுங்கச் சாவடிகளைக் கடந்துவிட முடியும்.

தற்போது சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பயனாளர்களுக்கு தனியாக பாதைகள் அமைக்கப்பட் டுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைகி றது. எனவே, அனைத்து வாக னங்களுக்கும் ‘பாஸ்டேக்' முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டண முறையை அமல்படுத்தி உள்ளோம். இதற்காக சில தனியார் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடிகளில் இதற்கான பிரத்யேக அட்டையை பெற்றுக் கொண்டு, தேவையான அளவுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 10 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.

இந்த அட்டையை சம்பந்தப் பட்ட வாகனங்களின் முன்பகுதியில் ஒட்டிக் கொள்ள வேண்டும். சுங்கச்சாவடி அருகே 100 மீட்டருக்கு முன்பு வாகனம் வரும்போதே ‘பாஸ்டேக்’ மின்னணு அட்டையில் இருந்து உரிய கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். இதனால் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. வாகன நெரிசலும் ஏற்படாது. தற்போது ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் 2 தடத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த திட்டம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் மாதம் கட்டாய மாக்கப்படவுள்ளது. இதற்கான கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், சுங்கச்சாவடிகளில் ஓரிரு தடங்களில் ரொக்கம் செலுத்தி பயணம் செய்யும் அனுமதிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x