

சென்னை சூளைமேட்டில் காணாமல் போனதாக மனைவி அளித்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுனரை போலீஸார் தேடி வந்த நிலையில் கிண்டி ரெயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தில் வசிப்பவர் ரகிமா (44). இவரது கணவர் பன்னீர் பன்னீர்செல்வம்(47). ஆட்டோ ஓட்டுனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் பன்னீர்செல்வம் நேற்று காலை ஆட்டோ சவாரிக்காக புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை, அவரது செல்போனுக்கு மனைவி, மகள்கள் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இரவு முழுதும் வீடு திரும்பாததாலும் நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் விசாரித்தும் தகவல் இல்லாததால் சூளைமேடு காவல் நிலையத்தில் பன்னீர் செல்வத்தின் மனைவி கணவரை காணவில்லை என புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் ஆள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரமாக அடிபட்ட நிலையில் ஆண் பிணம் ஒன்றை கைப்பற்றிய கிண்டி போலீஸார் இதுகுறித்து சூளைமேடு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் ஆட்டோ ஓட்டுனர் மனைவியை அழைத்து வந்து அடையாளம் காட்ட சொன்னபோது கைப்பற்றப்பட்ட பிணம் தனது கணவர் பன்னீர் செல்வம் தான் என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ரெயிலிலிருந்து பன்னீர் செல்வத்தை தள்ளிவிட்டு கொன்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். பன்னீர் செல்வத்தின் ஆட்டோ எங்கேப்போனது என்பது தெரியவில்லை.
காணாமல்போன ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டது சூளைமேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.