Published : 19 Sep 2019 06:20 PM
Last Updated : 19 Sep 2019 06:20 PM

மயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட ஆட்சியர்: மக்கள் நெகிழ்ச்சி

கரூர்

நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரைத் தூக்கிச் சென்று உதவிய மாவட்ட ஆட்சியரின் செயலை, பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

கரூர், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குபட்ட கிராமங்களில் குடி மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் இன்று பார்வையிட்டார். பணி முடித்து குளித்தலை டோல்கேட் வழியாக, அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் மயங்கிக் கிடந்தார். அதைக் கண்ட ஆட்சியர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தினார்.

அங்கிருந்த போக்குவரத்துக் காவலரின் உதவியுடன் முதியவரை ஆட்சியர் தூக்கிச் சென்றார். டீக்கடையில் முதியவரை அமரவைத்து, அவரின் சட்டைப் பொத்தான்களைக் கழற்றிவிட்டு, தண்ணீரை வழங்கி ஆசுவாசப்படுத்தினார்.

108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அழைத்த ஆட்சியர், முதியவரை குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவலரிடம் நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து மயங்கி விழுந்த முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து, தனக்கு அறிக்கை அளிக்கும்படி குளித்தலை வட்டாட்சியருக்கு, ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டார்.

முதியவருக்கு முதியோர் உதவித் தொகை பெறும் தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு, உதவித் தொகைக்கான ஆணையை வழங்கும்படி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த மனித நேயமிக்க செயல், அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x