Published : 19 Sep 2019 05:53 PM
Last Updated : 19 Sep 2019 05:53 PM

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தீனா மற்றும் சேதுராஜ் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தீனா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.19) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை, ஆலந்தூரில் உள்ள முகலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் தீனா என்பவர் கடந்த 15-ம் தேதி முகலிவாக்கம் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சிட்லபாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மின் கம்பம் மீது சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், மின் கம்பம் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சேதுராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட இரண்டு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த தீனா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த செல்வன் தீனா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x