

மதுரை
நீர்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததால் பெரியாறு அணை நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.இதனால் இரு போக பாசன விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தென்மாவட்டங்களில் ஒரளவு பெய்தாலும் மதுரையில் ஏமாற்றியது. ஆனால், பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்ததால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து இருந்தது.
அணை நீர் மட்டம் உயரத்தொடங்கியதால் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணை நீர் மட்டம் 50 அடியை தாண்டியதால் பெரியாறு கால்வாய் இருபோக பாசனத்திற்கு 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி 50 ஆயிரம் ஏக்கர் இரு போக பாசன விவசாயிகள் நெல் சாகுபடி பணியை தொடங்கிவிட்டனர். வைகை அணையில் தற்போதுள்ள தண்ணீர் இருப்பு, இந்த இரு போக சாகுபடி பணிக்குப் போதுமானதாக இல்லை.
அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யாது. அதிர்ஷ்டசமாக பெய்தால்தான் உண்டு.
ஆனாலும், வடகிழக்கு பருவமழை மதுரை மாவட்டத்தில் பெய்து கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பருவம் தவறி தற்போது மதுரை மாட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதனால், மண்ணில் ஈரப்பதம் அதிகமாகி நிலத்தடி நீர் மட்டமும் உயரத்தொடங்கியுள்ளது. குடிநீர் பிரச்சனையும் தீர்ந்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று மாலையும் மதுரையில் அரை மணி நேரம் கன மழை பெய்தது.
ஆனால், இந்த மழை பெரியாறு, வைகை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யவில்லை. அதனால், பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இன்று(செப்.19) மாலை வெறும் 320 கன அடி தண்ணீர் மட்டுமே பெரியாறு அணைக்கு வந்தது. இருந்தாலும்கூட பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு வழக்கம்போல் 1,560 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால், வைகை அணை நீர்மட்டம் 56 அடியில் உள்ளது.
ஆனால், பெரியாறு அணை நீர் மட்டம் இன்று குறையத்தொடங்கியது. இன்று காலையில் பெரியாறு அணை 127.8 அடி இருந்தது. 10 மணி நேரத்தில் 0.2 அடி குறைந்து மாலை 127.6 அடியாக வீழ்ச்சியடைந்தது. இதேநிலை தொடர்ந்தால் நாளை காலை 127.3 குறையும் வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறையினர் கவலை தெரிவித்தனர்.
கடைமடையில் நீர் வரத்து குறைந்தது
பெரியாறு இரு போக பாசனக்கால்வாயில் வைகை அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் விவசாயப்பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டும், இதன் கடைகடைப்பகுதிக்கு இன்னும் போதுமான தண்ணீர் வரவில்லை. ஒரு மோட்டார், இரண்டு மோட்டார் தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
அதனால், பொதுப்பணித்துறையினர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் அளவை குறைத்துவிட்டார்களா? அல்லது வரும் வழியில் யாராவது கண்மாய்களுக்கு தண்ணீரை திருப்பிவிட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாசனக்கால்வாயில் தண்ணீர் திறப்பை குறைக்கவில்லை. ஆனால் வழிநெடுக விவசாயிகள் தண்ணீரை நெல் நாற்று சாகுபடிக்கு பயன்படுத்துவதால் கடைமடைக்கு 150 கன அடி தண்ணீர் மட்டுமே வர வாய்ப்புள்ளது, ’’ என்றார்.