Published : 19 Sep 2019 03:54 PM
Last Updated : 19 Sep 2019 03:54 PM

தமிழ்நாட்டில் மரங்களை பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை ஏற்படுத்துக: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செப்.19) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், மரங்களை பாதுகாப்பதற்கும் மரங்கள் சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. மரங்களை மட்டுமின்றி, மரங்களின் வழியாக பொதுமக்களையும் பாதுகாக்க மரங்கள் சட்டம் அவசியம் என்பதால் உயர் நீதிமன்றத்தின் இந்த யோசனை வரவேற்கத்தக்கது.

மதுரையில் நெடுஞ்சாலை பாலம் அமைப்பதற்காக 80-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட நிலையில், மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் மரங்களை வெட்டி வீழ்த்துவதை விட, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நடலாம் என்று அறிவுரை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், மரங்களை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டாலாவது அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் வழி பிறக்காதா? என்ற கேள்வியை ஏக்கத்துடன் எழுப்பியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இந்த அக்கறை நேர்மையானது; எதிர்பார்ப்பு நியாயமானது. மரங்களை பாதுகாப்பதில் இதே அக்கறையையும், நேர்மையையும் பாமக கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவே பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் கூடுதலான மரக்கன்றுகளை நட்டிருப்பதுடன், வளர்ந்த மரங்களை பாதுகாத்தும் வருகிறது. அதுமட்டுமின்றி, மரங்களை பாதுகாப்பதற்காக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

மரங்கள் ஆணையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும். மரங்கள் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் எந்த பகுதியிலும், எந்த பணிக்காகவும் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றால், அதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் மரங்கள் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த கோரிக்கையை ஆய்வு செய்யும் மரங்கள் ஆணையம், கள ஆய்வு மேற்கொண்டு தவிர்க்க முடியாத தேவை இருந்தால் மட்டுமே மரங்களை வெட்ட அனுமதி அளிக்கும். அவ்வாறு அனுமதி அளிக்கும் பட்சத்தில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக எவ்வளவு மரக்கன்றுகள் எந்தெந்த பகுதிகளில் நடப்பட வேண்டும் என்பது குறித்தும் மரங்கள் ஆணையம் ஆணை பிறப்பிக்கும்; அந்த ஆணைப்படி புதிதாக மரங்கள் நடப்படுவதையும் ஆணையம் கண்காணிக்கும். இதன்மூலம் மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், தமிழகத்தின் பசுமைப்பரப்பும் விரிவுபடுத்தப்படும்.

மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் மரங்கள் ஆணையம் மிகப்பெரிய கவசமாக திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ்நாட்டில் மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே கட்சி பாமக தான். 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் இதற்கான வாக்குறுதியை பாமக வழங்கியிருந்தது. அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி 2016 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

அதற்கெல்லாம் மேலாக சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் மரங்கள் ஆணையம் மற்றும் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்ட போது, அதை ஏற்றுக் கொண்ட இதே நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு, தமிழகத்தில் மரங்கள் ஆணையம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியது.

இப்போது இரண்டாவது முறையாக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதற்கு முன் 2007 ஆம் ஆண்டிலேயே மரங்கள் சட்டத்தை இயற்ற உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக அரசு மரங்கள் சட்டத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது.

மரங்களை பாதுகாக்க வேண்டியது சாதாரண காலத்திலேயே மிகவும் அவசியம் ஆகும். இப்போது புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இது மேலும் அவசியமாகிறது. எனவே, மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுடன், அதை செயல்படுத்த மரங்கள் ஆணையத்தையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x