Published : 19 Sep 2019 03:18 PM
Last Updated : 19 Sep 2019 03:18 PM

40 நாட்களுக்குப் பிறகு தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து தொடங்கியது

கூடலூர்

கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடு காணி மலைப் பாதையில் 40 நாட்களுக்குப் பிறகு வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடு காணி வழியாக மலப்புரம், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு பகுதிகளுக்கு மலைப்பாதை செல்கிறது. கடந்த மாதத் தொடக்கத்தில் கூடலூர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் கூடலூர்- கேரள எல்லையான கீழ்நாடு காணியில் இருந்து வழிக்கடவு வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஐந்து இடங்களில் ராட்சதப் பாறைகள் சாலையில் விழுந்தன. சாலையும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.

இதனால், கூடலூர்- மலப்புரம் இடையே கடந்த 1 மாதத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே வர்த்தக ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும், மருத்துவ சிகிச்சை மற்றும் வேலைக்காகச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். இதுதவிர சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் நீலகிரி மாவட்டம் பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் கீழ்நாடு காணியில் இருந்து வழிக்கடவு மலைப்பாதை வரை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் குவியல்களை அகற்றும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், கூடலூரில் இருந்து கேரளப் பகுதியில் உள்ள தேன்பாரா வரை சிறிய ரக வாகனங்கள் இயக்கப்பட்டன.

இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் தேன்பாரா வரை பயணம் செய்தனர். பின்னர் அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்று மறுமுனையில் நிறுத்தப்பட்டு இருந்த கேரளப் பதிவு எண் கொண்ட தனியார் வாகனங்கள் மூலம் வழிக்கடவு, பெருந்தல்மன்னா, மலப்புரம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்தனர்.

தற்போது, சிறிய வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலை சீரமைக்கப்பட்டு கார், ஜீப், ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 40 நாட்களுக்குப் பின்னர் கூடலூர்-மலப்புரம் சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விரைவில், கனரக போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x