

சென்னை
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (செப்.19) வெளியிட்ட அறிக்கையில், "ரயில்வே துறையில் காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றது.
62,907 பணியிடங்களுக்கான இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்துகொண்டபோதும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பழகுநர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அதேபோல தற்போதும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகத் தெரிய வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.