

மதுரை
கால்நடை இனப்பெருக்க சட்டத்தைக் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்க முயற்சி நடைபெறுவதாக சமூக நலச் செயற்பாட்டாளர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு அண்மையில் கால்நடை இனப்பெருக்கச் சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் முகிலன் இவ்வாறு கூறியிருக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்று (வியாழக்கிழமை) மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (ஜே.எம்.) 4-ல் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீண்ட நாட்களாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முகிலன் ஆஜராகாமல் இருந்த நிலையில் இன்று அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், "ஜல்லிகட்டு காளைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும். கால்நடை இனப்பெருக்கச் சட்டத்தைக் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்கும் முயற்சி நடைபெறுகிறது" என்றார்.
மேலும் அவர், "மத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை எல்லாம் தமிழக அரசு தட்டிக் கேட்க மறுக்கிறது. இத்தகைய எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும். இந்தி திணிப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம்" எனக் கூறினார்.