தமிழகத்தில் அடுத்த 2-3 தினங்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

படம்: எல்.சீனிவாசன்
படம்: எல்.சீனிவாசன்
Updated on
1 min read

சென்னை

தமிழகத்தில் அடுத்த 2-3 தினங்களுக்கு மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் பாலச்சந்திரன் இன்று (செப்.19) செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சிலமுறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மழை நிலவரமானது, அடுத்து வரும் 2-3 தினங்களுக்கு தமிழகத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்குத் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், மிதமான மழை பெய்துள்ளது. ரெட் அலர்ட் ஏதும் இல்லை. தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் , தமிழகம் பகுதியில் கடந்த ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் பதிவான மழையின் அளவு 32 செ.மீ.".

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை உட்பட திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in