மீனவர் வலையில் ராட்சத மயில் மீன்: மிக வேகமாக நீந்தும் கடல்வாழ் உயிரினம்

மீனவர் வலையில் ராட்சத மயில் மீன்: மிக வேகமாக நீந்தும் கடல்வாழ் உயிரினம்
Updated on
1 min read

ராமேசுவரம்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்த பாம்பன் மீனவர்கள் வலையில் ராட்சத மயில் மீன் சிக்கியது.

கடல் வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக் கூடியது மயில் மீன். இது மணிக்கு சராசரியாக 100 கி.மீ. வேகத்தில் நீந்தும். மயிலின் தோகைகள் போன்று இந்த மீனின் துடுப்புகள் இருப்பதால் ராமேசுவரம் மீனவர்கள் இதை மயில் மீன் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று ஆங்கிலத்தில் அழைக் கப்படும் இந்த மீனின் விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடியஸ் ஆகும். கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்று அர்த்தம்.

பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும் மயில் மீன்கள், ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்த பாம்பன் மீனவர் வலையில் நேற்று சிக்கி யது. இது குறித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கூறிய தாவது:

புதன்கிழமை கரை திரும்பிய பாம்பன் மீனவர் படகு ஒன்றில் 6 அடி நீளம், 80 கிலோ எடை கொண்ட மயில் மீன் சிக்கியது. ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடிய மயில் மீன்கள் கடல் நீர் வெதுவெதுப்பாகவும், ஆழம் குறைவாகவும் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு இனப்பெருக்கத்துக்காக வந்திருக் கலாம்.

கடலின் மேல்பரப்பில் தாவித்தாவி நீந்தும்போது படகில் உள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.

மாசி கருவாடு

ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மயில் மீன்களைத் தூண்டில் போட்டு பிடிப்பது மிகப் பிரபலமான பொழுது போக்காக உள்ளது. இம்மீனை வாங்கும் வியாபாரிகள் மாசி கருவாடு தயாரிக்க அனுப்பி விடுவார்கள் என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in