

மதுரை
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குமிடத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் வேதனையடைந்தனர்.
மதுரை வைகை ஆற்றங்கரையோரப்பகுதி வார்டுகளில் பாதாள சாக்கடை இல்லை. தற்போதுதான் மாநகராட்சி பாதாள சாக்கடை அமைத்து வருகிறது. ஆனாலும் இந்தத் திட்டத்தில் கழிவுநீர் சுத்தகரிக்கப்படவில்லை. ஆற்றில் கழிவு நீராக கலக்கிறது. முன்பு, கழிவு நீர் கலந்தாலும் வைகை ஆற்றில் ஒரிடத்தில் தேங்காமல் ஓடி வெயிலில் காய்ந்துவிடும். தற்போது வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறக்கும் பகுதி அருகே தடுப்பணை கட்டியுள்ளதால் கழிவுநீர் அப்பகுதியில் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் பீறிட்டு வெளியேறியது. இதனால், கடும் தூர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள்
உடைந்த பாதாளசாக்கடை கழிவு நீர் குழாயை சரி செய்யும் பணியை தொடங்கினர். கழிவு நீர் அப்பகுதியில் தேங்கியதால் மோட்டார் மூலம் பம்பிங் செய்து வைகை ஆற்றுக்குள் விட்டு உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.