Published : 19 Sep 2019 12:32 PM
Last Updated : 19 Sep 2019 12:32 PM

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.100 கோடியில் அறுவைசிகிச்சை: அரங்கு அமைக்க மண் பரிசோதனை பாரம்பரிய கட்டிடத்தை இடிக்க முடிவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி உதவியுடன் ரூ.100 கோடியில் அமையவுள்ள அறுவை சிகிச்சை அரங்கிற்காக, மண் பரிசோதனை நடந்தது. இதனால், மருத்துமனையின் 175 ஆண்டு பழமையான கட்டிடம் இடிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கடந்த 175 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அந்தக்கால மக்கள் தொகை அடிப்படையில் சுமார் 12.5 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக பாறை கற்களால் மிகவும் பாதுகாப்பான கட்டிட கலையில் கட்டப்பட்டது.

இந்த மருத்துவமனை, 1842ம் ஆண்டு எர்கின்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1954ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனை கட்டிடக் கலையானது கதிர்வீச்சுகளை தாங்கும் உறுதித்தன்மை கொண்டது. அதனால், புராதன சின்னமாக இந்த மருத்துவமனை இன்றுவரை மக்களால் நேசிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை உள்பட தமிழகத்தின் முக்கிய 6 மருத்துவமனைகளை நவீனப்படுத்த ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜைக்கா நிறுவனத்தின் நிதி ஆதாரத்துடன் ரூ.1,634 கோடியில் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட இதர மருத்துவ வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளது.

இதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.100 கோடியில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம் கட்டிடம் மட்டும் கட்டப்படுகிறது. மருத்துவகருவிகள், அதற்கான ஹைடெக் வசதிகளை சேர்க்கும்பட்சத்தில் இந்த கட்டிடம் ரூ.300 கோடியில் அமைகிறது.

25 ஹைடெக் அறுவை சிகிச்சை அரங்கம், 600 பேர் அமரக்கூடிய கருத்தரங்கு கூடம், அதி நவீன கிருமி நீக்கி அறை, அதி நவீன சலவையகம், மயக்கவில்துறை மற்றும் சிடி, எம்ஆர்ஐ கருவிகள் ஆய்வுக்கூடம் 7 தளங்களில் கட்டப்படுகிறது.

இதற்காக மருத்துவமனையின் மையப்பகுதியில் ஆடிட்டோரியம் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளை இடித்துவிட்டு சுமார் 18,549 சதுர மீட்டர் இடத்தில் ஜைக்கா நிறுவனத்தின் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் கட்டப்பட உள்ளது.

இதற்காக, 175 ஆண்டிற்கு முந்தைய பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படும் மருத்துவமனையின் முகப்புக் கட்டிடத்தில் 50 சதவீதம் கட்டிடம் இடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதான சாலையில் இருந்து பார்த்தால், மக்கள் பார்வைக்கு ஜைக்கா நிறுவனம் கட்டும் இந்த உயர் தொழில்நுட்பக் கட்டிடம் பிரமாண்டமாக தெரியும் விதமாக இருக்க வேண்டும் என அந்நிறுவனத்தினர் விரும்புகின்றனர். அதற்காக, மருத்துவமனையின் முகப்பு பகுதி முழுவதுமே இடிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையின் முகப்புப் பகுதி இடிக்க நேரிட்டால் டீன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளே நுழையும் பிரதான நுழைவுப் பகுதி, அதன் அருகில் அமைந்துள்ள கண் சிகிச்சைப்பரிவு, இருதயப்பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் மருத்துவப்பிரிவு, அறுவை சிகிச்சை மருத்துவக்காப்பீடு பிரிவு, மருத்துவர்களின் ஓய்வு அறை என்று பழமையான கட்டிடங்கள் இடிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.

ஆனாலும், தற்போது திட்டமிட்டப்படி, இந்த பராம்பரிய கட்டிடங்களை இடித்து அறுவை சிகிச்சை அரங்கு கட்டுவதற்கு கடந்த சில நாட்களாக, அந்த கட்டிடங்கள் அருகேயே மண் பரிசோதனை நடந்தது.

இதுகுறித்து ‘டீன்’ வனிதாவிடம் கேட்டபோது, ‘‘கட்டப்படும் கட்டிடத்தின் உறுதிதன்மைக்காக மண்பரிசோதனை எடுத்து சென்றுள்ளனர். கற்களால் கட்டிய கட்டிடங்கள் புரதாண சின்னங்கள் பட்டியலில் இடம்பெறாது. ஆனாலும், மக்கள் கோரிக்கையை ஏற்று, இடிக்கப்பட உள்ள பழைய கட்டிடத்தின் ஒரு பகுதியை மட்டும்விட்டுவிட்டு மற்றப்பகுதிகளில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x