Published : 19 Sep 2019 12:20 PM
Last Updated : 19 Sep 2019 12:20 PM

ஆதரவற்றோரை மீட்கும் கருணை பயணம்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடக்கம்

தூத்துக்குடி

சாலையோரம் வசிக்கும் ஆதர வில்லாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் கருணை பயணம், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நேற்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் சாலையோரம் இருக்கும் ஆதரவில்லாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தப் படுத்தி, புத்தாடை அணிவித்து, அவர்கள் விரும்பும் பட்சத்தில் மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் 'கருணை பயணம்' என்ற பெயரில், 100 நாள் தொடர் பயணத்தை 4 தன்னார்வலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

பசியில்லா தமிழகம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஜின்னா, ஆர்- சோயா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.சரவணன், தன்னார்வலர்கள் ஜாபர், நசீர் ஆகியோர், இந்த கருணை பயணத்தை கடந்த 6-ம் தேதி திருநெல்வேலியில் தொடங்கினர். தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி மற்றும் புதுச்சேரி மாநகராட்சி பகுதிகளில் 100 நாட்கள் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு மாநகராட்சியிலும் 30 முதல் 40 ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் தொடங்கிய பயணம் நாகர்கோவில் சென்று, அங்கிருந்து நேற்று தூத்துக்குடிக்கு வந்தது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 5 நாட்கள் நடைபெறுகிறது. இப்பயணத்தை, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, நகர்நல அலுவலர் (பொ) ஸ்டாலின் பாக்கியநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

எஸ்.என்.சரவணன் கூறும்போது, 23-ம் தேதி மதுரை செல்கிறோம்.

டிசம்பர் 14-ம் தேதி சென்னையில் பயணத்தை நிறைவு செய்கிறோம். பயணத்தின் போது சாலையோரம் இருப்போரின் நிலை, எதற்காக அவர்கள் காப்பகங்களில் தங்க மறுத்து சாலையோரம் இருக்கின்றனர் என்பன போன்ற விவரங்களை அறிக்கையாக தயாரித்து, தமிழக முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கவுள்ளோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x