Published : 19 Sep 2019 12:16 PM
Last Updated : 19 Sep 2019 12:16 PM

சங்கரன்கோவில் மாவட்டம் அமைப்பது சாத்தியமா? புள்ளி விவரங்கள் தரும் ஒருங்கிணைப்பு குழு

திருநெல்வேலி

சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைப்பதற்கான தேவையை விளக்கி மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி மற்றும் திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கோரிக்கை இயக்க ஒருங்கிணைப்பு குழுவினர் மனுக்கள் அளித்தனர்.

மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய தென்காசி மாவட்டம் அமைப்பதை முழுமை யாக வரவேற்கிறோம். அதே சமயம் பூகோள ரீதியாகவும், நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் தேவை மற்றும் வசதிக்காகவும் சங் கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.

அதிக வருவாய்

திருநெல்வேலி மாவட்டத்தை விட பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் குறைவாக அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க உள்ளது போன்று, திருநெல்வேலி மாவட்டத்தையும் திருநெல்வேலி, தென்காசி, சங்கரன் கோவில் என, மூன்று மாவட்டங் களாக பிரிக்கலாம். மாவட்ட தலை நகர் ஆக்குவதற்கான சகலவித மான அளவீடுகளும், தகுதியும், இட வசதியும், போக்குவரத்து வசதியும் சங்கரன்கோவிலுக்கு உள்ளது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சமேத கோமதியம்மன் திருக்கோயிலில் 5 லட்சம் மக்கள் கூடும் ஆடித்தபசு திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது. சங்கரன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை தொழிற்சாலைகள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, பட்டாசு, தீப்பெட்டி, செங்கல் சூளைகள், கல்குவாரி ஆகிய தொழில்களும் அதிகளவில் உள்ளன.

தமிழகத்தில் அதிக அளவில் வத்தல், பருத்தி, பூ, எலுமிச்சை ஆகியவற்றை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் முக்கிய வியாபார தலமாகவும், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இடமாகவும் சங்கரன்கோவில் உள்ளது. அரசுக்கு அதிகமாக வருவாய் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தும் பகுதியாகவும் உள்ளது.

நில ஆர்ஜிதம் தேவையில்லை

சங்கரன்கோவில், திருவேங் கடம், சிவகிரி, வீரகேரளம்புதூர் ஆகிய தாலுகாக்களின் மையமான பகுதியாகவும், அனைத்து பகுதி களுக்கும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் சங்கரன்கோவில் உள்ளது.

மாவட்ட அலுவலகங்கள் அமைப்பதற்கு தாலுகா அலுவலகம் அருகில் 9 ஏக்கர், கழுகுமலை சாலையில் 30 ஏக்கர், நகராட்சி அலுவலகம் அருகில் 20 ஏக்கர், திருநெல்வேலி சாலை சண்முகநல்லூரில் 85 ஏக்கர் என அரசுக்கு சொந்தமான இடங்கள் தாராளமாக உள்ளதால், எவ்வித நில ஆர்ஜிதமும் தேவை இல்லை.

அதிகமான வருவாய் கிராமங்கள் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் தேவை ஏற்பட்டால், திருவேங்கடம் தாலுகாவில் இருந்து கோவில்பட்டி தாலுகாவுக்கு சென்ற இளையரசநேந்தல், கோவில்பட்டி தாலுகாவின் கழுகுமலை ஆகிய பிர்காக்களை சங்கரன்கோவிலுடன் சேர்க்கலாம். எனவே, தாலுகா வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி சங்கரன்கோவில் மாவட்டம் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x