Published : 19 Sep 2019 11:59 AM
Last Updated : 19 Sep 2019 11:59 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 நாட்களாக தொடரும் மழையால் முழு கொள்ளளவை எட்டிய 2 ஏரிகள்: மற்ற ஏரிகளும் விரைவாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 2 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பாசனத்துக்கென ஆறு எதுவும் இல்லாததால் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இவற்றில், 14 ஏரிகளில் நடப்பாண்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பெரம்பலூர் மாவட் டத்தில் பெய்த மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குன்னம் வட்டத்தில் உள்ள கீழப்பெரம்பலூர் ஏரி, வடக்கலூர் ஏரி ஆகியவை முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகின்றன. இதில், கீழப்பெரம்பலூர் ஏரியில் நிகழாண்டு ரூ.24 லட்சம் மதிப்பில் வரத்து வாய்க்கால் சீரமைப்பு, புதிதாக கலிங்கு அமைப்பு, கரை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள் ளப்பட்டன. வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதால், அவற்றின் வழியே மழைநீர் விரைவாக ஏரியை வந்து சேர்ந்து, ஏரி நிரம்ப காரணமாக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு பிரிவின் உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் கூறியபோது, “பெரம் பலூர் மாவட்டத்தில் அக்டோபரில் இருந்து ஜனவரி வரை ஏரி, குளங்கள் நிரம்புவது வழக்கம். நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக செப்டம்பர் மாதத்தின் நடுவிலேயே 2 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இதுதவிர ஆய்க்குடி ஏரி 50 சதவீதத்துக்கு மேலாகவும், 8 ஏரிகள் 25 சதவீதத் துக்கு மேலாகவும் கொள்ளளவை எட்டியுள்ளன” என்றார்.

கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி அளவை விட 45 சதவீதம் மழை குறைவாக பெய்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. நிலத்தடி நீர் வளம் குறைந்து கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயம் பொய்த்துப்போய் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தனர். இந்நிலையில், நிகழாண்டு ஓரளவுக்கு மழை பெய்து வருவதாலும், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதாலும் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x