Published : 19 Sep 2019 11:50 AM
Last Updated : 19 Sep 2019 11:50 AM

ஓசூர் பகுதியில் பூச்சி மருந்துக்கு மாற்றாக பசை தடவிய அட்டைகள் மூலமாக அதிக மகசூல் பெரும் விவசாயிகள்

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர்

ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க பூச்சி மருந்துக்கு மாற்றாக ‘இனக் கவர்ச்சிப் பொறி அட்டை’ என்னும் பசை தடவிய அட்டைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெரும் முயற்சியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக் கோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங் களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், பீட்ரூட் மற்றும் மலர்கள் உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் தரமான காய்கறிகள் மற்றும் மலர்களுக்கு சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வரவேற்பு காணப்படுகிறது. இதனால் தோட்டப்பயிர்களில் கவனம் செலுத்தி வரும் விவசாயிகள், பயிரிடும் செலவைக் குறைத்து அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் ஈட்டும் வகையில் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்கும் ‘இனக்கவர்ச்சிப் பொறி’ என்னும் பசை தடவிய அட்டைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து பாகலூரில் காலிபிளவர் பயிரிட்டுள்ள விவசாயி ராமசாமி கூறியதாவது:

தோட்டப்பயிர்களில் பூச்சி மற்றும் புழு தாக்கி நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதை தடுக்கும் வகையில் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பசை தடவப்பட்ட நீலம் மற்றும் மஞ்சள் வண்ணமுடைய இனக்கவர்ச்சி பொறி அட்டைகளை பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஏக்கருக்கு 10 அடி இடைவெளியில் சுமார் 80 அட்டைகளை பயிர்களின் இடையே வைக்க வேண்டும். இதற்கு ஒரு அட்டைக்கு ரூ.30 வீதம் ரூ.2400 செலவாகிறது. ஒரு முறை செலவு செய்து வைக்கப்பட்ட இந்த அட்டைகளை தொடர்ந்து 4 முறை பயன்படுத்த முடியும்.

இதனால் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் செலவு குறைவதுடன், பூச்சி மருந்து பாதிப்பு இல்லாத தரமான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். பயிர்களை தாக்க வரும் பூச்சிகள் பசையுள்ள அட்டைகளில் ஒட்டிக் கொண்டு அழிகின்றன. இம்முறையில் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்பட்டு மகசூல் அதிகரிக்க ஏதுவாகிறது. மேலும் 4 முறை பூச்சி மருந்து அடிக்கும் கூலி செலவும் குறைகிறது. இவ்வாறு ராமசாமி கூறினார்.

இதுகுறித்து சூளகிரி உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்வேந்தன் கூறியதாவது:

பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க இனக்கவர்ச்சிப் பொறி அட்டைகளை பயன்படுத்தும் முறையில் பயிர்களை தாக்கக்கூடிய சிறு பூச்சிகள், அந்துப்பூச்சிகள் குறிப்பாக வெள்ளை ஈக்கள் போன்ற பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் வகையில் பசை தடவிய மஞ்சள் வண்ண அட்டைகளும், இலை மற்றும் காய்களில் சாறு உறிஞ்சக்கூடிய அனைத்து வகை பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கும் வகையில் பசை தடவிய நீல வண்ண அட்டைகளும் பயிர்களின் இடையே வைக்கப்படுகின்றன. இதனால் பூச்சி மருந்து செலவு குறைவதுடன், பூச்சி மற்றும் பயிர்களை தாக்கக் கூடிய வைரஸ் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x