Published : 19 Sep 2019 11:43 AM
Last Updated : 19 Sep 2019 11:43 AM

காவிரி டெல்டாவில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மையகரம் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக வயலில் சாய்ந்த நிலையில் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்கதிரை சூழ்ந்துள்ள தண்ணீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

தஞ்சாவூர்

காவிரி டெல்டாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பம்பு செட் மூலம் குறுவை நெற்பயிர் கடந்த ஜூன் மாதம் நடவு செய்யப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒருவார காலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மாலை நேரத்தில் தொடங்கி, இரவு வரை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மழையோடு காற்றும் அதிகமாக இருப்பதால் அதிகளவில் நெற்கதிர்கள் வயல்களில் சாய்ந்து காணப்படுகிறது. இதனால், இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலையில், விவசாயத் தொழிலாளர்களை கொண்டே அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக, விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதுகுறித்து திருவையாறை அடுத்த அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்த் கூறியது: எங்களது பகுதியில் தற்போது குறுவை அறுவடை தொடங்கிய நிலையில், தொடர் மழையின் காரணமாக நெற்கதிர் அனைத்தும் வயலில் சாய்ந்துவிட்டது.

வயலில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஒரு சில இடங்களில் நெற்கதிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. வடிகால்களை முறையாக தூர் வாராத காரணத்தால் மழைநீர் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது. விளைந்த நெல் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவையாறு பகுதியில் மட்டுமே 300 ஏக்கர் குறுவை நெல் மழையால் வீணாகியுள்ளது என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க.நெடுஞ்செழியன் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 37 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்யப்பட்டு, தற்போது மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் ஹெக்டேரில் அறுவடை முடிந்துள்ளது. மழையின் காரணமாக சில இடங்களில் அறுவடை தாமதமாகியுள்ளது. குறுவை சாகுபடியில் ஏக்கருக்கு சராசரியாக 6700 கிலோ நெல் விளைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x