Published : 19 Sep 2019 11:35 AM
Last Updated : 19 Sep 2019 11:35 AM

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு: கோவை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு

கோவை

வரிசையில் நின்று பயணச்சீட்டு பெறுவதால் ரயில் நிலையங்களில் ஏற்படும் நேர விரயம், காத்திருப்பைத் தவிர்க்கவும், காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கவும், முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் யுடிஎஸ் (UTS) செயலியை ரயில்வே அறிமுகம் செய்தது.

இது தொடர்பாக ரயில்வே மற்றும் பொள்ளாச்சி ரயில் பயணிகள் நல சங்கம் ஆகியவை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. அப்போது, துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கி மூலம் யுடிஎஸ் செயலி குறித்து பயணிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவை ரயில் நிலைய இயக்குநர் சதீஷ் சரவணன் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோவையைப் பொறுத்தவரை, கோவை-பொள்ளாச்சி பயணிகள் சிறப்பு ரயில், கோவை-மேட்டுப் பாளையம் பயணிகள் ரயிலில் பயணிப்போர், பாலக்காடு, திருப்பூர், ஈரோடு செல்வோர், யுடிஎஸ் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். யுடிஎஸ் செயலியை ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் செல்போன்களில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர் செல்போன் எண், அடையாள அட்டை விவரங்களை சமர்ப்பித்து பிரத்யேக கணக்கை உருவாக்கிக் கொண்டு பயணச்சீட்டு பெறலாம். இந்தச் செயலியை ரயில்நிலையத்துக்கு 5 கிலோ மீட்டருக்கு உட்பட்ட எந்தவொரு இடத்தில் இருந்தும் பயன்படுத்தி பயணச்சீட்டு பெற முடியும். ரயில் நிலையத்துக்கு 25 மீட்டருக்கு வெளியே இருந்துதான் பயணச்சீட்டு பெற முடியும். ரயில் நிலையத்துக்குள் நின்றுகொண்டு பயணச்சீட்டு பெற முடியாது. ஒரு பயணி ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 பயணச்சீட்டுகள் வரை பெறலாம்.

யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லா பயணச்சீட்டு, பிளாட்பார டிக்கெட், மாதாந்திர பயணச்சீட்டுகளை உடனடியாக பெற முடியும். பயணச்சீட்டு பரிசோதகர் கேட்கும்போது செல்போன் திரையில் தோன்றும் பயணச்சீட்டினை காட்டினால் போதும்.

ரூ.100-க்கு ரூ.5 போனஸ்

யுடிஎஸ் செயலி மூலம் பெறப் படும் டிக்கெட்டுக்கான கட்டணத்தை ‘ஆர்-வேலட்’ (R-Wallet) மூலம் மட்டுமே செலுத்த முடியும். டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் உள்ளிட்டவற்றின் மூலம் ரயில்வேயின் ‘ஆர்-வேலட்’டில் பணத்தை செலுத்தி, அதிலிருந்து டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். பயணச்சீட்டு வழங்கும் இடங்களிலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

‘ஆர்-வேலட்’-ல் ரீசார்ஜ் செய்யும்போது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், ரூ.5 போனஸாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, ரூ.1,000-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 போனஸாக வழங்கப்பட்டு, உங்கள் கணக்கில் ரூ.1,050 வந்து விடும். ‘ஆர்-வேலட்’-ல் உள்ள பணம் நம் அவசர தேவைக்கு தேவைப்பட்டால், அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x