Published : 19 Sep 2019 11:18 AM
Last Updated : 19 Sep 2019 11:18 AM

வடகிழக்குப் பருவமழையில் ஏதேனும் பேரிடர்கள் நேர்கின்றன: அமைச்சர் உதயகுமார் பேட்டி

கடலூர்

வடகிழக்குப் பருவ மழையின்போது எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை உட்பட திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

திருவள்ளூரில் ஒரே இரவில் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூண்டியில் 20 சென்டிமீட்டர் மழையும், திருத்தணியில் 15 சென்டிமீட்டர் மழையும், சோழாவரத்தில் 13 சென்டிமீட்டர் மழையும், திருவாலாங்காட்டில் 12 சென்டிமீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 10 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றத்தில் 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை விட்டுவிட்டுப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூரில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''வடகிழக்குப் பருவ மழையின்போது ஏதாவது பேரிடர்கள் ஏற்பட்டுவருகின்றன. இதை நாம் எதிர்கொள்ள வேண்டியது அவசியம், புவியியல் அமைப்பிலேயே இது உள்ளது.

தென்மேற்குப் பருவ மழையின் போது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மழை பெறுகின்றன. அதில் அவர்களுக்குக் கிடைக்கும் அதிக மழையை நமக்கு வழங்கிவிடுகிறார்கள். நாம் வடிநிலையாக அதை ஏற்றுக்கொள்கிறோம்.

அரசியல் விமர்சனங்கள் தவிர்த்து, பருவ மழையைக் கையாள சில நடைமுறைகளை வைத்திருக்கிறோம். மழையால் எந்தெந்த இடங்கள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை ஆய்வு செய்து, அங்கு நிவாரண முகாமும் அதிகாரிகள் குழுவும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த கால அனுபவங்களின் மூலம் தாழ்வான பகுதிகள் எவை எவை என்பதையும் ஆய்வு செய்துள்ளோம். அதேபோல வெள்ளத் தணிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பேரிடர் காலங்களில் அதிகாரிகள் மக்களை உடனடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து வருகின்றன'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x