

சென்னை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகள் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை உட்பட திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
திருவள்ளூரில் ஒரே இரவில் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூண்டியில் 20 சென்டிமீட்டர் மழையும், திருத்தணியில் 15 சென்டிமீட்டர் மழையும், சோழாவரத்தில் 13 சென்டிமீட்டர் மழையும், திருவாலாங்காட்டில் 12 சென்டிமீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 10 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றத்தில் 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில் அதிகாலை 5 மணி நிலவரப்படி மழையின் அளவு அயனாவரத்தில் 9 சென்டிமீட்டரும், பெரம்பூரில் 8 சென்டிமீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டரும், மீனம்பாக்கத்தில் 6 சென்டிமீட்டரும் பதிவாகியுள்ளது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், பல்லாவரம், கே.கே.நகர், மாம்பலம், தி.நகர், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. நகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோயம்பேடு பகுதியில் மழை கொட்டித் தீர்த்ததால் வியாபாரிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை விட்டுவிட்டுப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கனமழை காரணமாகவும் மழை விடாமல் பெய்துவருவதால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்பு என பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், காலாண்டுத் தேர்வு நடக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர்கள் சீதாலட்சுமி, மகேஸ்வரி, பொன்னையா அறிவித்துள்ளனர்.