சென்னை மழை நீர் வடிகால் திட்டம்;  45 டெண்டர்களுக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை

சென்னையில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பான 45 டெண்டர்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மற்றும் ஆறாவது மண்டலங்களான தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் மற்றும் அதன் பரமாரிப்பு உள்ளிட்ட 45 விதமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாளை டெண்டர் திறக்கப்பட உள்ளது.

இந்த டெண்டரைப் பெற மாநகராட்சி புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளதால், டெண்டருக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “புதிய நடைமுறை காரணமாக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடத்தப்பட இருக்கும் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டரை அறிவிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in