

புதுச்சேரி
புதுச்சேரியில் 2-வது நாளாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் கிராமப் பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். மூன்று மாதங்களுக்கு ஊதியம் தரமுடியாத அளவுக்கு வருவாயை இழந்து மோசமான நிலைக்கு பிஆர்டிசி தள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 1986-ம் ஆண்டு புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகமாக தொடங்கப்பட்டு 1988-ல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையே 55 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகமாக மாற்றப்பட்டது.
தற்போது மாநிலத்திலும், மாநிலங்களுக்கு இடையேயும் 140க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, நெல்லை, நாகர்கோவில், காரைக்கால், விழுப்புரம், கடலூர், மாஹே, திருப்பதி, பெங்களூரு, பகுதிகளுக்கு பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில் 20 ஏசி பேருந்துகள் உள்பட 50 பேருந்துகள் கடந்த 2014-ம் ஆண்டு பெறப்பட்டு பல மாதங்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டு பின்னர் குறுகிய காலமே இயங்கி நின்று போனது.
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் 140 அரசுப் பேருந்துகளை புதுச்சேரி மட்டுமில்லாமல் பல வெளியூர்களுக்கு இயக்குகிறது. இங்கு பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஓட்டுநர் தற்கொலை செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பாதுகாவலர் ரமேஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெறுகிறார். போக்குவரத்துக் கழகத்திலுள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து ஊதியம் தரக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடப்பதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இருந்தாலும் கிராமப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளே செல்கின்றன. கிராமப் பகுதிகளில் இருந்து புதுச்சேரி வருவோர் கடும் சிரமங்களுக்கு உள்ளாகினர். வெளியூர் செல்ல முன்பதிவு செய்தோரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஊழியர்கள் ஊதியம் தரக்கோரி கோஷம் எழுப்பினர். பல முறைகேடுகளால் தான் தற்போது மோசமான நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- செ.ஞானபிரகாஷ்