Published : 18 Sep 2019 07:27 PM
Last Updated : 18 Sep 2019 07:27 PM

இந்தி விவகாரம்; அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்று திமுகவின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: ஸ்டாலின் 

சென்னை

ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்றும் திமுக நடத்தவிருந்த மாநிலம் தழுவிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்தார்.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் பலரும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் மட்டுமல்லாது இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தித் திணிப்புக்கு எதிராக வரும் 20-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக திமுகவின் போராட்ட அறிவிப்பு:

“இந்தியாவின் அடையாளமாக ஒரேயொரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழிதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு, திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம்” என்று கூறி,மாநிலங்களின் மொழியுணர்வு - குறிப்பாகத் தமிழ் மொழி உணர்வை அவமதித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ,தனது கருத்தைத் திரும்பப் பெற்று, நாடு மேம்பட வழிவிட வேண்டும் என்றும் மக்கள் அளித்திருக்கும் பெரும்பான்மையை, நாட்டில் கிளர்ச்சிகள் மூலம் அமைதி இன்மையை ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியும் களம் காணத் தயாராகிறது திமுக.

பாஜக அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால் அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதற்கட்டமாக திமுக 20-9-2019 (வெள்ளிக்கிழமை) அன்று காலை10 மணி அளவில், தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” என அறிவித்திருந்தது.

அமித் ஷா விளக்கம்

இதற்கு கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. நடிகர் ரஜினிகாந்தும் அமித் ஷாவின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தார். அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் இதற்கு தற்போது அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

ராஞ்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேசும்போது, “இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்றால் இந்தி கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் நான் கூறினேன். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்தே வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஸ்டாலின் பேட்டி

இந்நிலையில் அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்ற திமுக தனது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து ஆளுநரைச் சந்தித்த பின் அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

“இன்று காலை தமிழக ஆளுநர் என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் நானும் டி.ஆர்.பாலுவும் மாலையில் சந்தித்தோம். வருகிற 20-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் காரணம் குறித்து ஆளுநர் கேட்டார்.

நாங்கள் என்னென்ன காரணத்திற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்பதற்கான காரணங்களைத் தெரிவித்தோம். அப்போது அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எந்தக் காரணம் கொண்டும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார். இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா? என்று கேட்டோம்.

நான் மத்திய அரசின் பிரதிநிதி. நான் மத்திய அரசு சொல்லித்தான் நான் தெரிவிக்கிறேன் என்று ஆளுநர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா ஊடகங்களில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார்.

எனவே அமித் ஷா சொன்ன கருத்தை ஏற்று வருகிற 20-ம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிமாக ஒத்திவைத்துள்ளோம். மீண்டும் சொல்கிறோம் தமிழகத்தில் எந்த வடிவிலும் இந்தி திணிக்கப்பட்டால் அதை கடுமையாக திமுக எதிர்க்கும்.

இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் இந்த விளக்கம் தர வேண்டும் என்பதற்காக அளித்திருக்கிறார். ஏற்கெனவே தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் அவரது விளக்கம் திமுகவுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x