

சேலம்
'மோட்டார் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் நடக்கும் ஒரு நாள் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயங்காது' என சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிகப்படியான கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகையை விதித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகை மற்றும் கட்டணங்களைக் குறைத்து லாரி தொழிலைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டி ஒரு நாள் லாரி அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இயங்கும் 4.50 லட்சம் லாரிகள் நாளை ஒரு நாள் இயக்கப்படமாட்டாது. நாளை (செப்.19) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:
''சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். 44 ஏ -இ வருமான வரி விதியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் பத்து சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தினால் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படைவதுடன், தொழில் நசிவுக்கு உள்ளாகிடும் என்பதால், மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவிப்புக்கு இணங்க மாநிலம் முழுவதும் நாளை ஒரு நாள் லாரிகள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயங்காது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 38,390 லாரிகள் நாளை இயங்காது. இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
இந்த லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தில் 10 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனை தேக்கம் அடையும். சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் இடப்பெயர்ச்சியாகாமல் தேக்கமடையும். அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு நாளை ஒரு நாள் ரூ.1 கோடி வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும். சேலம் மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் ரூ.50 லட்சம் வருவாய் இழப்புக்கு உள்ளாவர். எனவே, மத்திய அரசு லாரி தொழில், உரிமையாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலார்கள் நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய வாகனச் சட்டத்தில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்துள்ளார்.