Published : 18 Sep 2019 06:26 PM
Last Updated : 18 Sep 2019 06:26 PM

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு;  ‘தும்பியின் வாலில் பாறாங்கல்’ - கமல் கோபம்

சென்னை

எட்டாவதுடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியதற்கு எனக்கு பல காரணங்கள் இருந்தாலும், இனி எந்த ஒரு குழந்தையும் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தினால் அதற்கு நீங்கள் அறிமுகப்படுத்தும் பொதுத்தேர்வுதான் காரணமாக இருக்கப்போகிறது என கமல் காட்டமாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல் இதை விமர்சித்து காணொலி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

“ஒரு தும்பியுடைய வாலில் பாராங்கல்லைக் கட்டி பறக்கவிடுவது, எவ்வளவு கொடுமையான‌ விஷயமோ அதை விடக் கொடுமையானது 10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையைக் கட்டி ‌வைப்பது.

இந்தக் கல்வித் திட்டம் நமது குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாகச் சொல்லிக் கொடுக்கும். இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.

சாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. இந்தப் பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது ஒரு குழந்தை இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ? என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும்.

நான் எட்டாம் வகுப்போடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல் படுத்தியிருக்கும் பொதுத்தேர்வு மட்டும் தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள்ளளவும் பயன்தராத இந்தப் புதிய கல்வித் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்தத் திட்டதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறது.

இதற்குப் பதிலாக பள்ளிக் கட்டிடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் கவனம் நீங்கள் செலுத்தினால் மாற்றம் இனிதாகும். நாளை நமதாகும்”

இவ்வாறு கமல் காணொலியில் தெரிவித்துள்ளார்.

நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப். 13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x