Published : 18 Sep 2019 04:41 PM
Last Updated : 18 Sep 2019 04:41 PM

மாத்திரையில் இரும்புக் கம்பி: கோவை மருந்தகத்தில் அதிர்ச்சி சம்பவம்; மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் மீது புகார்

மாத்திரையில் இரும்புக்கம்பி

கோவை

கோவையில் பல் வலியால் பாதிக்கப்பட்ட நபர் மருந்தகத்தில் வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (24). இவர் கார் இருக்கை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். முஸ்தபா கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று (செப்.18) காலை கரும்புக் கடை பகுதியில் உள்ள செல்வம் மருந்தகத்தில் மாத்திரை வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று மாத்திரையை உடைத்து உண்ண முற்பட்டார். அப்போது மாத்திரைக்குள் சிறிய இரும்புக் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து முஸ்தபா உடனடியாக மாத்திரையை எடுத்துக்கொண்டு செல்வம் மருந்துக் கடையில் முறையிட்டார்.

இதைத் தொடர்ந்து மாத்திரை வாங்கியதில் ஏற்பட்ட சேவைக் குறைபாடு தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையாக புகார் அளிக்க இருப்பதாகவும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்தபா கூறும்போது, "சாதாரண பல் வலிக்காக வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்று அலட்சியங்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த மருந்து நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x