Published : 18 Sep 2019 04:33 PM
Last Updated : 18 Sep 2019 04:33 PM

இந்தி மொழி குறித்து அமித் ஷா பேச்சு; ரஜினியின் கருத்து சரியே: வைகைச்செல்வன்

சென்னை

இந்தி மொழி திணிப்பு குறித்து ரஜினி சரியாகவே கருத்து தெரிவித்திருக்கிறார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் வைகைச்செல்வன் கூறும்போது, ''எந்த மொழியையும் திணிக்க முடியாது. திணிக்கவும் கூடாது என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். ஆக, இந்தியாவில் ஒரு மொழி பொதுமொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் இந்தியக் கலாச்சாரம், தொன்மை, பண்பாடு, அதன் நீண்ட, நெடிய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து கிடைக்கிறது. பல்வேறு மொழி, இனம், கலாச்சாரங்களில்தான் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்கிறோம்.

வேற்றுமையோடு இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறோம். இந்த ஒற்றுமையின் மீது கல்லெறிகிற முயற்சியாக, மொழித் திணிப்பு அமைகிறது. இது பெரிய சர்ச்சையையும் இந்திய இறையாண்மை குறித்த கேள்விக்குறியையும் எழுப்பும்.

இங்கு இருக்கக்கூடிய பன்முகக் கலாச்சாரம் சிறப்பாக உள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்தித் திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டர்கள். அண்ணா காலம் தொட்டு, பலர் தமிழ் மொழியைக் காக்க, தங்கள் உடலையே தின்னக் கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடும்போது, வட மாநிலத்தில்கூட இதை ஏற்க மாட்டார்கள் என்ற சரியான கருத்தை முன்வைத்திருக்கிறார். ஆகவே பன்முகத் தன்மை, பாரம்பரியம் கொண்ட இந்தத் தன்மைதான் தொடரவேண்டும்'' என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.

அமித் ஷாவின் இந்தி மொழி பற்றிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ''நம் நாடு என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது.

எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமில்லை. தென் இந்தியாவில் எந்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தித் திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது'' என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x