

ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகும் பரிதாபம் தொடர்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியும், மருந்துகளும் கிடையாது. இயல்பாக வரும் டெங்கு காய்ச்சல் இயல்பாகவே குணமாகக்கூடிய நோய். இந்த இடைப்பட்ட நேரத்தில் மருத் துவரை அணுகி சிகிச்சை பெறாவிட்டால் நோயாளிகள் இறக்கக்கூடும்.
மதுரையில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு சிறு குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்தனர். அரசு ராஜாஜி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் நிரந்தரமாகவே 80 முதல் 100 நோயாளிகள் டெங்கு காய்ச்ச லுக்கு சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சீசனை பயன்படுத்தி மற்ற வார்டுகள்கூட டெங்கு சிகிச்சை கூடமாக மாற்றப்பட்டதுண்டு. அந்த அளவுக்கு நோயாளிகள் வருகை அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு டெங்கு மரணங்கள் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்ததால் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அரசு ராஜாஜி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், சுகாதாரத்துறை உத் தரவால் மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் பற்றி எதுவும் கூறுவ தில்லை.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாவதற்கு மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று மருத்துவர்கள் குறை கூறுகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் மழைக்காலங்களில் மட்டுமே தற்காலிக கொசு ஒழிப்பு நட வடிக்கை எடுப்பதும், நிரந்தரமாக மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுமே டெங்கு பரவ முக்கியக் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறியதாவது:
மழைநீர் கால்வாய்களைத் தூர்வாராததால் கழிவு நீர் எப்போதுமே தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது மழைநீரும் தேங்குகிறது. அதனால், மதுரையில் கொசுத் தொல்லை நிரந்தரமாகவே உள்ளது. சாலைகளில் குழி தோண்டும் ஊழியர்கள் மூடாமல் செல்கின்றனர். குண்டும் குழியு மான சாலைகளை நெடுஞ் சாலைத்துறையும், மாநகராட்சியும் பராமரிப்பதில்லை. அதனால், லேசான மழைக்கே தண்ணீர் வெளியேற வழியின்றி மதுரையே தெப்பமாகி போக்குவரத்தும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. கூடவே டெங்கு காய்ச்சலும் பரவுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் மழை பெய்தால் அந்த தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது. மருத்துவமனையைச் சுற்றிலும் சாக்கடை கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மருத் துவமனையில் இருந்து வெளி யேறும் கழிவு நீர், அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் அரு கில் உள்ள வைகை ஆற்றில் நிரந்தரமாகத் தேங்கி நிற்கிறது. அதனால், அரசு மருத்துவமனை யில் பகலில் மட்டுமின்றி இரவிலும் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் நோயாளிகள் தூங்க முடியாமல் கொசுக்கடியால் நரக வேதனை அனுபவிக்கின்றனர்,
இவ்வாறு அவர் கூறினார்.