

மதுரை
மதுரை ஆவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழரசன், மதுரை ஆவின் அலுவலகத்தையும், ஆவின் வாகனத்தையும் பயன்படுத்தத் தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆவின் தலைவராக முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் செயல்பட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் மதுரை ஆவின் அலுவலகத்தையும், ஆவின் வாகனத்தையும் பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்த வழக்கில், மதுரை ஆவின் தலைவராக மதுரை கிழக்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் செயல்பட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.
இந்நிலையில் மதுரை ஆவின் நிர்வாகக் குழு உறுப்பினர் பெரியகருப்பன் உட்பட 6 பேர் உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செதனர். அதில், "மதுரை ஆவின் தலைவராக தமிழரசனை தேர்வு செய்தது செல்லாது. முறையாக தேர்தல் நடத்தி மதுரை ஆவின் தலைவரை தேர்வு செய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் இன்ற (புதன் கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை ஆவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழரசன், மதுரை ஆவின் அலுவலகத்தையும், ஆவின் வாகனத்தையும் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.