Published : 18 Sep 2019 12:54 PM
Last Updated : 18 Sep 2019 12:54 PM

அரசுப் பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் தலையீடா?- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை

சென்னை

அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் தலையீடு கற்றல் கற்பித்தல் பணிகளைப் பாதிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தினந்தோறும் புதுப்புது அறிக்கைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவது வரவேற்புக்குரியது. ஆனால் சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை கல்வித்துறை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொழிப்பாடங்களை ஒரு தாளாக மாற்றியது, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் 16.09.2019 அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளில் தலையிட்டு கற்பித்தல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியிருப்பது படிக்கும் மாணவர்களிடையே மன உளைச்சலும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், குழந்தைகளின் மன உளவியலுக்கு ஏற்ப மாணவர்களின் குடும்பச்சுழல் அறிந்து அணுகி, தொடர் கண்காணிப்பின் மூலமாகவே கற்பித்தல்- கற்றல் நிகழ்வு ஏற்படும்.

திடீரென்று புதியவர்கள் கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டால் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதோடு கற்றல் பணியும் பெரிதும் பாதிக்கும். இயக்குநரின் சுற்றறிக்கையில் கற்றல்- கற்பித்தல் பணி மற்றும் தேர்வு பாதிக்காத வகையில் என்றால் எந்த நேரத்தில் அல்லது விடுமுறை காலத்திலா எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை பள்ளியின் வளர்ச்சி, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாமே தவிர கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபடுத்தினால் மாணவர்களின் மனநலம் பாதிப்பதோடு பாதுகாப்பிற்கும் உறுதியில்லை. மேலும் ஆசிரியர்களின் மீதுள்ள நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையிலும் உள்ளூர் கல்வியாளர்களைக் கொண்டு பாடம் நடத்தவேண்டும் என்பதை நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும், மாநில அரசும் வலியுறுத்திட கருத்துரைகள் வழங்கியிருக்கின்றோம். இந்நிலையில்தேசியக் கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளதை அமல்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை முனைப்புக் காட்டுவதை பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அரசுப் பள்ளிகளை காப்பாற்றவும் மாணவர்களின் நலன் கருதியும் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x