

கும்பகோணம்
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யாரோ ஒரு சிலர் சுய நலத்துக்காக வெளியேறுவதால் இந்த இயக்கத்துக்கு எந்தவித பாதிப்பும் இன்று மட்டுமல்ல என்றுமே ஏற்படாது. ஒருவர் விலகுவதால் அவரால் பாதிக்கப்பட்ட பலர் அமமுகவில் இணைந்து கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சுகிறார்கள்.
வருங்காலத்தில் அமமுக தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாகி, சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்.
புகழேந்தியின் கருத்துக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அவர் அமமுகவில் இருக்கிறாரா இல்லையா என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழி இந்தியா முழுவதும் பேசப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் யாரும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தித் திணிப்புக்குதான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்தியை விரும்பி படிப்பவர்களை யாரும் தடுக்கப் போவதில்லை. மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்காது என நம்புகிறோம்.
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு அதிமுக- அமமுக இணையுமா என்பது தொடர்பான யூகங்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என்றார்.