Published : 18 Sep 2019 12:33 PM
Last Updated : 18 Sep 2019 12:33 PM

புதிய பாலம் கட்டுவதற்குள் தண்ணீர் வந்து விட்டதால் 10 அடி உயர கதவணையில் ஏறி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே புதிய பாலம் கட்டுவதற்குள் தண்ணீர் வந்து விட்டதால், 10 அடி உயர கதவணையில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தெற்கு புத்தாற்றில் ஏரவாஞ்சேரியிலிருந்து துறையூருக்கு இணைப்பு பாலம் இருந்தது.

இப்பாலம் சேதமடைந்ததை அடுத்து, ரூ.4 கோடியில் இணைப்பு பாலமும், சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கின. இதனால், இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய பழைய பாலம் இடிக்கப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக ஆற்றில் மண்ணால் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய பாலம் அமைக்க கான்கிரீட் போடப்பட்ட 12 மணிநேரத்தில் தெற்கு புத்தாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் வந்த தண்ணீர் தரைப்பாலத்தில் தேங்கி நின்றது.

தண்ணீர் செல்லும் வகையில் தரைப்பாலத்தை பொதுப் பணித்துறையினர் தோண்டி விட்டதால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இதனால், துறையூர் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், துறையூர் பகுதி மாணவ, மாணவிகள் அப்பகுதியில் உள்ள கதவணையில் 10 அடி உயரம் ஏறி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

கதவணையில் மாணவ, மாணவிகளால் ஏற முடியாததால், அப்பகுதி யில் உள்ள பெரியவர்கள் மாணவ, மாணவிகளை கதவணை மீது ஏற்றி விடுகிறார்கள்.

மாலை பள்ளி முடிந்தது வரும்போது கதவணையிலிருந்து இறக்கி விடுகின்றனர்.

சைக்கிள் வைத்துள்ள பள்ளி மாணவ, மாணவிகள் நெய்குப்பை வழியாக 5 கி.மீட்டர் சுற்றிச் செல்கின்றனர்.

பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து பொதுப்பணித்துறை யினர், நிறுத்தப்பட்டுள்ள புதிய பாலம் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும் என துறையூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறையினரிடம் விசாரித்தபோது, ‘‘தெற்கு புத்தாற்றில் தண்ணீர் வற்றினால்தான் புதிய பாலம் கட்டுமான பணியை தொடங்க முடியும். தற்காலிகமாக தட்டிப்பாலம் கட்டிக் கொடுத்துள்ளோம். மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x