

கோவை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணையின் நீர்த் தேக்கப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமாகின.
மொத்தம் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணைக்கு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் வழியே செல்லும் பவானியாறு மற்றும் மாயாறு மூலம் தண்ணீர் செல்கிறது. அணை நிரம்பினால், அதன் நீர்தேக்கப் பகுதிகளான சுமார் 70 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதி கிராமங்கள் பாதிக்கப்படும்.
இந்நிலையில், கடந்த இரு வார மாக பவானியாறு மற்றும் மாயாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் மழை பெய்துவருவதால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருகிறது. இதனால், லிங்காபுரம் பகுதியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 20 அடி உயர பாலம் நீரில் மூழ்கி வருகிறது. ஆற்றின் அக்கரையில் உள்ள காந்தவயல், காந்தையூர், உளியூர், ஆளூர் என நான்கு கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்டப் பாலத்தின் மேல் வழிந்தோடும் நீரில், ஆபத்தான வகையில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சென்று வரும் சூழல் உருவாகியுள்ளது.மேலும், இப்பகுதியில் உள்ள மூலையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் பயிரிடப்பட்டிருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நான்கடி உயரம் வரை நீரில் மூழ்கி உள்ளதால், இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் அழுகி, சாய்ந்து வருகின்றன.
பதினோரு மாதப் பயிரான வாழை மரங்கள் அறுவடைக்கான கடைசிக்கட்டத்தில் சேதமாகி விட்டதால், விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தை 32 அடியாக உயர்த்திக் கட்டித்தர வேண்டும், சேதமான வாழை களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.