Published : 18 Sep 2019 12:08 PM
Last Updated : 18 Sep 2019 12:08 PM

பொருளாதாரம், சிதம்பரம் கைது, இந்தி திணிப்பு, கல்விக்கொள்கை உள்ளிட்டவைகளை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தீர்மானம்

சென்னை

பொருளாதார நிலை, சிதம்பரம் கைது, இந்தி திணிப்பு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவைகளை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில்நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

''தீர்மானம் -1: மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் நிறைவு விழா

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சத்தியாகிரகம், அகிம்சை என்ற கொள்கைகளைக் கடைபிடித்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி, விடுதலையை பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்தி. அவரது 150-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு வருகிற அக்டோர் 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஒருவார காலம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாட வேண்டுமென்று சோனியா காந்தி அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி மாநில அளவில் விழாக்குழு அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல, மாவட்ட அளவிலும் விழாக்குழுக்களை அமைக்க வேண்டும். விழாவை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். அண்ணலின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் நாள் முதல் 9 ஆம் நாள் வரை அனைத்து மாவட்டங்களிலும் பாத யாத்திரை நடத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்
கொள்கிறது.

தீர்மானம் - 2: ப. சிதம்பரத்தை பழிவாங்கும் பா.ஜ.க. அரசு

மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் பொறுப்பு வகித்த போது மே 2007 ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். ஊடகத்திற்கு அந்நிய முதலீடு பெறுவதற்கு வழங்கிய ஒப்புதல் குறித்து 10 ஆண்டுகள் கழித்து 2017 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா அந்நிய முதலீடு பெறுவதற்கான அனுமதியை பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் செயலாளர் தலைமையில் 6 செயலாளர்கள் அடங்கிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்தான்அனுமதி வழங்கியது. அன்றைய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் இந்த அனுமதிக்கான பரிந்துரைக்கு அலுவல் ரீதியான ஒப்புதலைதான் வழங்கினார். ஏற்கனவே எடுக்கப்பட்டமுடிவுக்கு ஒப்புதல் வழங்கியதை தவிர, இதில் அவருக்கு வேறு எந்த பங்கும் இல்லை. அனுமதி வழங்கியவர்களை விட்டுவிட்டு, இதற்கு ஒப்புதல் வழங்கிய சிதம்பரத்தைக் கைது செய்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக, ஆணித்தனமான, ஆதாரபூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டு, அவை ஊடகங்களில் முழுமையாக வெளிவந்ததை சகித்துக் கொள்ள முடியாத சர்வாதிகார எண்ணம் கொண்ட நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இணைந்து செய்த சதித்திட்டத்தின் காரணமாகவே திரு. ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் அவரது குரல் வளையை நெறித்து விடலாம் என்ற பா.ஜ.க.வினரின் கனவு நிச்சயம் நிறைவேறாது.

நீதிமன்றத்தின் முன் நியாயத்திற்காக போராடி, பொய் வழக்கை முறியடித்து சிதம்பரம் மீண்டும் தமது ஜனநாயக பணியை மிகுந்த பேராண்மையோடு தொடருவார் என்று இக்கூட்டம் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர், டி.கே. சிவகுமார் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கத்தோடு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவிவிட்டு, விசாரணை என்ற போர்வையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது 22 வயது மகளும் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் டி.கே. சிவகுமார் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவரது செயல்பாடுகளை முடக்கி விடலாம் என்று செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 3 : தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவின்படி மாவட்டத் தலைவர்கள் மற்றும் இதர முக்கிய தலைவர்களும் பங்கேற்கும் வகையில் வருகிற செப்டம்பர் 30, 2019 ஆம் நாளுக்குள் மாநில பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில் வேகமாக பெருகி வரும் பொருளாதார மந்தநிலை குறித்து மட்டுமே விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதை இக்கூட்டம் வலியுறுத்த விரும்புகிறது.

தீர்மானம் - 4 : உறுப்பினர் சேர்க்கை
புதிய உறுப்பினர் சேர்க்கை வருகிற அக்டோபர் 2019 துவங்கப்பட உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவின்படி மின்னணு மற்றும் நமது பாரம்பரிய முறையிலான உறுப்பினர் படிவம் முறையிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது. கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும், கட்சியின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகளின் உறுப்பினர்களோடு இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தி, வீடுதோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 5 : நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை
பொருளாதாரத்துறையை சார;ந்த வல்லுனர;களை அழைத்து மாநிலம் முழுவதும் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை குறித்து கருத்தரங்கங்கள் நடத்தப்படவேண்டும். மேலும் அக்டோபா; 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தற்போது நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கை எதிர்த்தும், பொருளாதார வீழ்ச்சியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற அவல நிலையையும் மக்களிடம் பிரச்சாரம் செய்கிற வகையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது. இதை நிறைவேற்றுகிற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்தி கூறுகிறது.

தீர்மானம் - 6: அரசியல் பயிற்சி முகாம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவின்படி அனைத்து நிர;வாகிகளுக்கும் தலைமைப் பண்பை மேம்படுத்தும் வகையில் அரசியல் பயிற்சி அளிக்க உள்ளது. மாநில அளவில் இந்தப் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர;களும், பயிற்சி வகுப்பு எடுக்க பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்களையும் விரைவில் அடையாளம் காணப்படவுள்ளது. மாநில அளவிலான பயிற்சி வருகிற நவம்பர் மாதமும், அதை தொடர;ந்து மாவட்ட மற்றும் வட்டார அளவிலும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

தீர்மானம் - 7 : மோடியின் நூறு நாள் ஆட்சி
2014 இல் வெற்றி பெற்ற பா.ஜ.க. மீண்டும் 2019 இல் ஆட்சி அமைத்திருக்கிறது. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் மதவாத அரசியல் மூலம் வாக்குகளை பெற்று மோடி ஆட்சி அமைத்திருக்கிறார். ஆனால், தற்போது நிலவுகிற பொருளாதார மந்தநிலை அவரது ஆட்சியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 2018 இல் 8 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜூலை 2019 இல் 5 சதவீதமாக கடுமையாக சரிந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் ரூபாயாக உயர்த்தப் போவதாக நரேந்திர மோடி எந்த அடிப்படையில் பேசினார் என்று தெரியவில்லை. அத்தகைய இலக்கை எட்டுவதற்கு குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், இந்திய பொருளாதாரம் 5 சதவீதத்திற்கும் கீழாகச் சென்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை ஏற்படுவது சகஜமான ஒன்று என்று பூசி மெழுகியிருக்கிறார். நிலைமையை முற்றிலும் உணராமல் அதற்குரிய தீர்வுகளை காணாமல் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து மக்களை திரட்ட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 8 : இந்தி மொழி திணிப்பு
பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை, ஒரே நுழைவுத் தேர்வு என இந்தியா முழுவதையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பின்னணியில் பா.ஜ.க. தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா சமீபத்தில் உரையாற்றும் போது, ‘இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்” என்று பேசி கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறார்.

மதவாத அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்துகிற பா.ஜ.க. தற்போது இந்தி மொழி திணிப்பின் மூலம் இன்னொரு வகையான பிளவினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்தி மொழியை நாம் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்திய அரசமைப்பு சட்டமும், ஆட்சி மொழிகள் சட்டமும் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கியிருக்கிற பாதுகாப்புகளை உதாசீனப்படுத்துகிற வகையில் இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டுமென்று ஆணவத்தோடு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டிக்கிற வகையில் தமிழகத்திற்கு வருகை புரிகிற போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 9 : ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை
இந்தியா முழுமையும் வருகிற 2020 ஆம் ஆண்டு ஜூன் 1ம் நாளுக்குள் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்கிற திட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. இதை தமிழகத்தில் நிறைவேற்றுவது என அ.இ.அ.தி.மு.க. அரசு முடிவெடுத்திருக்கிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் ஏறத்தாழ 2 கோடி. இதில் ஐந்து வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்நிலையில் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன ?

வெளிமாநிலங்களில் இருந்து தற்காலிகமாக வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்ந்து வந்தவர்களுக்குப் பயன்படுகிற வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகிறார். வேறு மாநிலங்களில் இருந்து வேலை வாய்ப்பிற்காக வந்திருப்பவர்கள் குறித்த எந்த புள்ளிவிவரமும், எந்த அரசிடமும் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் ? இவர்களுக்கு வழங்குகிற உணவு தானியங்களுக்கான மானியத்தை எந்த அரசு ஏற்பது ? மத்திய அரசா? மாநில அரசா? இத்தகைய குழப்பங்கள் மிகுந்த ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை உடனடியாக கைவிடும்படி மத்திய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 10 : கல்விக் கடன்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் கல்விக்கடன் திட்டம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பொறியியல் மற்றும் மருத்துவ பட்டதாரிகளுக்கு எந்தவிதமான பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்குகிற திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி பதவி விலகுகிற போது, 24 லட்சம் மாணவர்கள் ரூபாய் 56 ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறார்கள் என்று புள்ளி விவரம்கூறுகிறது. இத்தகைய சிறப்பான திட்டத்தை சீர்குலைக்கிற வகையில் மத்திய நிதியமைச்சகம் தற்போது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கல்விக் கடனை வசூலிப்பதற்கு தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இதில் வசூலாகிற பணத்தில் வங்கிக்கு 55 சதவீதமும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீதமும் வழங்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் இதுவரை வழங்கப்பட்டுள்ள கல்விக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 11 : புதிய கல்விக் கொள்கை
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை பா.ஜ.க. அரசு அமைத்து புதிய கல்வி கொள்கையை வெளியிட்டிருக்கிறது. புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையின்படி 6 ஆம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிய மும்மொழி கொள்கையை கட்டாயமாக்க வேண்டுமென்று இந்த அறிக்கை கூறியிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழி திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்து போராடிய வரலாற்று நிகழ்வுகள் ஏராளம் உண்டு. இந்தி பேசாத மக்களுக்கு பிரதமர் நேரு வழங்கிய உறுதிமொழிக்கு எதிராக புதிய கல்விக் கொள்கையில் உள்ள இந்தி திணிப்பை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்த காரணத்தால்தற்காலிகமாக அது நீக்கப்பட்டுள்ளது.

இதை தவிர, பள்ளி கல்வியை நான்கு பிரிவுகளாக பிரித்தல், கல்லூரிகள் போல 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளில் 8 செமஸ்டர் தேர்வுகள்
நடத்தப்பட வேண்டும், தேசிய கல்வி ஆணையம் அமைத்தல், பண்பாட்டு, கலாச்சார ஒற்றுமையை வளர்க்க பெரிதும் உதவிய சமஸ்கிருத மொழியை அனைவரும் பயில வாய்ப்புகளை உருவாக்குதல் என்ற செயல் திட்டங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்கிற நோக்கத்தில் கருத்தரங்குகள் தமிழகம் முழுவதும் கல்வியாளார்களைக் கொண்டு மாவட்ட அளவில் நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கமிட்டிகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 12 : கிராம சபை கூட்டம்
நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மறைந்த பாரத ரத்னா ராஜீவ்காந்தி எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக மக்களுக்கு அதிகாரம் வழங்குகின்ற வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தத்தின்படி வருகிற அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. அன்று நடைபெறுகிற கிராமசபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. ஏறக்குறைய மூன்றாண்டு காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் அரசு அலுவலர்களின் பிடியில் சிக்கியுள்ளது. உயர் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஏதோ ஒரு காரணத்தை கூறி மாநில தேர்தல் ஆணையம், தோ;தல் நடத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது. தேர்தல் நடத்தப்படுவதை அ.தி.மு.க.வும் விரும்பவில்லை. இதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதற்கான தீர்மானங்களை கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 13 : டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக டிஜிட்டல் பேனர்ளை காங்கிரஸ் கட்சியினர் எவரும் பொது இடங்களில் வைக்கக் கூடாது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது. மேலும் டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x