Published : 18 Sep 2019 11:33 AM
Last Updated : 18 Sep 2019 11:33 AM

பாஜக சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

மதுரை

பாஜக சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது. இதுதான் மோடி அரசின் 100 நாள் ஆட்சியின் சாதனை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது ஆண்டு நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "ஒரு மொழிக் கொள்கை இந்தியாவை பிளக்கும் என்று நேரு கூறினார். இந்தியா இந்தி மொழி பேசும் ஒரே நாடாக வேண்டும் என அமித் ஷா அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத இந்தி மொழி பேசாத மாநிலங்கள் எல்லாம் வெகு சீக்கிரம் தனி நாடாக மாறலாம் என வழிகாட்டுவது போல் உள்ளது.

டெல்லி ஏகாதிபத்தியமாக மாறியிருக்கிறது. அது தடுக்கப்பட வேண்டும். மோடியின் அரசு கூட்டாட்சி தத்துவத்தை முழுமையாக சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் மோடியின் 100 நாள் ஆட்சியின் சாதனை.

ஒரு மாநிலத்தை பிளவு செய்கிறோம், மாநில அந்தஸ்தை ரத்து செய்கிறோம் என்பதைக்கூட அரைமணி நேரத்தில் விவாதம் இல்லாமல் நிறைவேற்றுகிறார்கள்.

கடந்த 26 ஆண்டுகளில் இந்தியா காணாத பொருளாதார வீழ்ச்சியை தற்போது கண்டுள்ளது. அதனால்தான் அந்நியச்செலவாணியில் ஒரு டாலர் ரூ. 78.90 காசாக உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவ்வளவு சூழ்நிலையிலும் இந்தியா வளர்கிறது என்கிறார் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவில் பல கட்சி ஆட்சிமுறையை ஒழித்து ஒரு கட்சி ஆட்சி முறை என சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் மோடி இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கிறார்.

சுதந்திரம் பெற்ற பிறகுதான் இந்திய வரலாறு உருவானது. அதற்கு முன்னர் 860 மன்னர்களின் ஆளுகையில் இந்தியா இருந்தது.
1947-க்குமுன்பு இந்தியா இல்லை, 1950-க்கு பின்னர்தான் உருவானது, குறிப்பாக 1952-க்குப்பின்தான் நடைமுறைக்கு வந்தது. இந்தியா என்பது உருவாக்கப்பட்டது. அதை தற்போது உடைக்கப்பார்க்கிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆணிவேரை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தடுக்கப்பட வேண்டும்.

மசோதா என்ற பெயரில் மனு தர்மம் நிறைவேற்றப்படுகிறது. காஷ்மீரில் உள்ள மக்கள், மாணவர்கள் என அனைவரும் வீட்டுச்சிறை கைதிகள்தான். அங்கு மட்டும் 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருந்தால் எப்படி சுதந்திரமாக நடமாட முடியும் "

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x