Published : 18 Sep 2019 10:53 AM
Last Updated : 18 Sep 2019 10:53 AM

சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி: பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறிய ஸ்டாலின்

சென்னை

பேனர் கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், சென்னையில் பேனர் விபத்தால் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.18), குரோம்பேட்டையில் உள்ள அவர்களுடைய இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"அதிகாரிகளிடம் அனுமதி பெற்றும், காவல்துறையிடம் அனுமதி பெற்றும் பேனர்கள் வைக்க வேண்டும். அதனை மீறி பேனர் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்த 2017-ம் ஆண்டு நான் செயல் தலைவராக பொறுப்பேற்ற போதே அறிவித்திருக்கிறேன்.

ஆனால், ஆளுங்கட்சி, பேனர்கள் வைக்க அனுமதி பெறாமல், ஒன்றிரண்டு பேனர்களுக்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு, நூற்றுக்கணக்கான பேனர்களை, முதல்வர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும், செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வழிநெடுக போக்குவரத்துக்கு பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடிய வகையில் பேனர்கள் வைக்கின்றனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தன் கண்டனத்தைத் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அவர்கள் பேனர்கள் வைக்கின்றனர். ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் ரகு இன்ற இளைஞனின் உயிர் போனது. இப்போது சுபஸ்ரீ உயிரிழந்தது வேதனையை அளிக்கிறது. அவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறேன். என்னதான் நாங்கள் ஆறுதல் கூறினாலும் அவர்களுடைய மனது ஆறுதல் அடையாது என எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், முடிந்தவரையில் நாங்கள் ஆறுதல்படுத்தியிருக்கிறோம்.

பேனர் கலாச்சாரத்தால் உயிரிழந்தது சுபஸ்ரீயுடன் முடியட்டும் என அவரின் தந்தை ரவி கூறியிருக்கிறார். திமுகவின் சார்பில் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் பேனர்கள் எங்கும் வைக்க மாட்டோம் என, உயர் நீதிமன்றத்தில் நாங்களே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறோம். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒன்றிரண்டு பேனர்களை மட்டும் அடையாளத்திற்கு வைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும். பேனர் கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து.

திமுக சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருக்கிறோம். உதவித்தொகை வழங்கினாலும், அந்த குடும்பம் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறது. அந்த குடும்பத்திற்கு திமுக துணை நிற்கும்.

சம்மந்தப்பட்டவரை நினைத்தால் அடுத்த நொடியே கைது செய்யலாம். ஆனால், நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர், இதுதான் உண்மை. இதனை அரசியலாக்க விரும்பவில்லை," என ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x