Published : 18 Sep 2019 09:42 AM
Last Updated : 18 Sep 2019 09:42 AM

கோவை இரட்டைக் கொலை வழக்கில் அக்.16-ம் தேதி வரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோவை

கோவையைச் சேர்ந்த சிறுவன், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற வரும் அக்.16-ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கோவை ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ரஞ்சித்தின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகன் ஆகிய இருவரும் கடந்த 2010 அக்.29-ம் தேதி பள்ளிக்கு வாடகை வேனில் புறப்பட்டனர். அவர்களை, வேன் ஓட்டுநர் மோகன்ராஜ் (எ) மோகன கிருஷ்ணன், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர், பொள்ளாச்சி மலைப் பகுதிக்கு கடத்திச் சென்றனர்.

அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இருவரையும் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜ், மனோகரனை கைது செய்தனர். கடந்த 2010 நவ.9-ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, போத்தனூர் அருகே போலீஸாரின் துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டுவிட்டு, தப்பியோட முயன்ற மோகன்ராஜை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

மனோகரன் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனோகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனோகரனை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக காவல் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இரட்டை தூக்கு, 3 ஆயுள் தண்டனைகளை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். செப்.20-ம் தேதி மனோகரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனோகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சஞ்சீவ் கண்ணா, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் மனோகரன் தரப்பில் 7 வழக்கறிஞர்கள் மாறி மாறி ஆஜராகியுள்ளனர். இதனால், மனோகரன் தரப்பு வாதம் சரிவர முன்வைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மனோகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாட, வரும் அக்.16-ம் தேதி இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், அதுவரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x